மக்களின் எண்ணங்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே மதுவை ஒழிக்க முடியும்-மதுரையில் சரத்குமார் பேச்சு


மக்களின் எண்ணங்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே மதுவை ஒழிக்க முடியும்-மதுரையில் சரத்குமார் பேச்சு
x

மக்களின் எண்ணங்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே மதுவை ஒழிக்க முடியும் என மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சரத்குமார் பேசினார்.

மதுரை

மக்களின் எண்ணங்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே மதுவை ஒழிக்க முடியும் என மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சரத்குமார் பேசினார்.

பொதுக்கூட்டம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது. கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் போதை பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. போதையால் இளைஞர்களின் அறிவு, ஆற்றல் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். போதைப் பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தாலும் அதனை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தியாவின் இளைஞர்களின் அறிவை முடக்கி வைப்பதில் வெளிநாட்டு சதி உள்ளது, போதை பொருள்கள் பல்வேறு ரூபங்களில் இந்தியாவில் ஊடுருவி வருகின்றது.

மதுவிலக்கு

மதுபான கடைகளுக்கு சென்று மதுபானங்கள் வாங்காமல் இருந்தால் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும். அதன் மூலம் மதுவிலக்கை அமல்படுத்த முடியும். மக்கள் நினைத்தால் மட்டுமே மதுவை முற்றிலுமாக ஒழிக்க முடியும். ரூ.40 ஆயிரம் கோடி வருவாய்க்காக, மதுவை அரசு விற்க கூடாது, மதுபான வருவாய்க்கு மாற்றாக பிற வருவாய் என்ன கிடைக்கும் என தமிழக அரசு சிந்தித்து பார்க்க வேண்டும். அறிவு, ஆற்றல் இருந்தும் தமிழக இளைஞர்கள் மதுவால் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். பூரண மதுவிலக்கிற்காக சமத்துவ மக்கள் கட்சி இறுதி வரை போராடும். சமத்துவ மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பணி பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

தமிழகத்தில் பணம் இல்லா அரசியல் நடைபெறவில்லை, தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல்கள் ராணுவ பாதுகாப்பில் நடைபெற வேண்டும்.

மதுவை ஒழிக்க வேண்டும் என்றால் மக்களின் எண்ணங்கள் ஒன்றிணைய வேண்டும். மக்களுக்காக மாதந்தோறும் பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதன்படி மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story