மத்திய பிரதேச இளம்பெண் சைக்கிள் யாத்திரை


மத்திய பிரதேச இளம்பெண் சைக்கிள் யாத்திரை
x

மத்திய பிரதேச இளம்பெண் சைக்கிள் யாத்திரையை கலெக்டர் விருதுநகரில் வரவேற்றார்.

விருதுநகர்


மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டம் நாதாரம் கிராமத்தை சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆஷா மாளவியா (வயது 24). உடற்கல்வியில் முதுநிலை பட்டம் பெற்றுள்ள இவர் தேசிய அளவில் மலையேறும் வீராங்கனை ஆவார். இந்தநிலையில் வெளிநாடுகளில் பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்ற கருத்துள்ள நிலையில் அவ்வாறு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை வலியுறுத்தி 28 மாநிலங்களில் 25 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் யாத்திரையை கடந்த நவம்பர் முதல் தேதியன்று போபாலில் தொடங்கினார். தினசரி 100 கிலோமீட்டர் முதல் 200 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் இவர் இதுவரை 7 மாநிலங்களில் 7,053 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார். செல்லும் இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகளை சந்தித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுடன் பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகார பகிர்வு குறித்து வலியுறுத்தி பேசுகிறார். வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்து தனது சைக்கிள் பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாக தெரிவித்தார். விருதுநகர் வந்த அவர் கலெக்டர் மேகநாத ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றார். கலெக்டர் மேகநாத ரெட்டி தன்னை ஊக்கப்படுத்தி தனது பயணம் குறித்து விரிவாக கேட்டு வாழ்த்தி அனுப்பியதாக ஆஷா மாளவியா தெரிவித்தார். முன்னதாக ராஜபாளையம் வந்த அவரை துணை போலீஸ் சூப்பிரண்டு ப்ரீத்தி வரவேற்று பாராட்டினார்.


Next Story