மீண்டும் சூறாவளிக்காற்றுடன் மழை
மடத்துக்குளம் அருகே மீண்டும் சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் வீட்டின் மீது மரம் விழுந்து மூதாட்டி காயமடைந்தார்.
ஆலங்கட்டி மழை
மடத்துக்குளத்தையடுத்த பாப்பான்குளம், சாமராயப்பட்டி, ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.இதனால் தென்னை, வாழை, முருங்கை, பப்பாளி, மக்காசோளம் உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் சேதம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் மின் கம்பங்கள் உடைந்து விழுந்ததாலும், சாலைகளில் மரங்கள் உடைந்து விழுந்ததாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
கோழிப்பண்ணை, செங்கல் சூளை உள்ளிட்டவற்றில் மேற்கூரை உடைந்து விழுந்து பலத்த சேதம் ஏற்பட்டது. அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வரும் முன்பாக நேற்று மாலை மீண்டும் காற்று ருத்ரதாண்டவம் ஆடியுள்ளது. மடத்துக்குளத்தையடுத்த சாமராயப்பட்டி, கொழுமம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மீண்டும் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் நீடித்த பலத்த மழை மற்றும் சுழன்றடித்த சூறைக்காற்றினால் பல பகுதிகளில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரமானதாலும், மின்தடை ஏற்பட்டதாலும் பயிர் பாதிப்பு குறித்து அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மூதாட்டி காயம்
இந்தநிலையில் கொழுமம் ஆத்தூர் ரோடு பகுதியில் ஒரு வீட்டின் மீது அருகிலிருந்த ஆலமரம் சரிந்து விழுந்தது. அந்த வீட்டில் குடியிருந்த வேலாத்தாள் (வயது 80) என்னும் மூதாட்டி இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியாத நிலையில் உடுமலை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூதாட்டியை மீட்டனர். லேசான காயங்களுடன் உயிர் தப்பிய மூதாட்டியை ஆம்புலன்ஸ் உதவியுடன் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காற்றால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.