மாடு மாலை தாண்டும் திருவிழா
சுக்காம்பட்டியில் மாடு மாலை தாண்டும் திருவிழா நடந்தது.
மாடு மாலை தாண்டும் திருவிழா
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள சுக்காம்பட்டியில் கம்பளத்து நாயக்கர்களுக்கு பட்டவன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு தினமும் பல்வேறு பூஜைகள் நடந்தது. திருவிழாவின் முக்கி நிகழ்ச்சியான மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்தது.
இதையொட்டி திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 14 மந்தைகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மாடுகள் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளைசாமி கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து 500-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. மாடுகள் எல்லை கோட்டை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தது. அப்போது அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
எலுமிச்சம் பழம் பரிசு
இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அய்யாசாமி மந்தை மாடு முதலாவதாக ஓடி வந்து எல்லைக்கோட்டை தாண்டியது. பின்னர் வெற்றி பெற்ற மாட்டுக்கு சமூக வழக்கப்படி 3 கன்னிப் பெண்கள் மஞ்சள்நீரை தெளித்து எலுமிச்சம் பழத்தை வெற்றி பரிசாக வழங்கினர்.
பின்னர் மஞ்சள் தெளித்த 3 கன்னி பெண்களும் எல்லைக்கோட்டில் இருந்து தேவராட்டத்துடன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். இதில் திரான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.