மதுரை அ.தி.மு.க. மாநாட்டில்தூத்துக்குடியில் இருந்து 15 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்க முடிவு:எஸ்.பி.சண்முகநாதன் தகவல்


மதுரை அ.தி.மு.க. மாநாட்டில்தூத்துக்குடியில் இருந்து 15 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்க முடிவு:எஸ்.பி.சண்முகநாதன் தகவல்
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் தூத்துக்குடியில் இருந்து 15 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக எஸ்.பி.சண்முகநாதன்தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு தூத்துக்குடியில் இருந்து 15 ஆயிரம் தொண்டர்களுடன் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக, மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கூறினார்.

விழிப்புணர்வு ஸ்டிக்கர்

மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறது. இது குறித்த மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசார ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி நேற்று காலை டூவிபுரத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டஅ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி ஸ்டிக்கரை ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் ஒட்டினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், முன்னாள் அரசு வக்கீல் சுகந்தன் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

15 ஆயிரம் பேர்

பின்னர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. எம்.ஜி.ஆர். தொடங்கி இந்த இயக்கத்தை ஜெயலலிதா ஒரு எக்கு கோட்டையாக மாற்றினார். எம்.ஜி.ஆர் ஒரு தலைமுறை, ஜெயலலிதா ஒரு தலைமுறை. தற்போது 3-வது தலைமுறையாக எடப்பாடி பழனிசாமி 2 கோடியே 30 லட்சத்துக்கு மேலாக உறுப்பினர்களை சேர்த்து உள்ளார். இதனால் உலகிலேயே 7-வது பெரிய கட்சியாக அ.தி.மு.க. உருவாகி உள்ளது. மதுரை மாநாடு சிறப்பாக அமையும். இதனால் தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சியும், எம்.பியும் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த முதல்-அமைச்சர் என்ற சூழல் தமிழகத்தில் ஏற்பட்டு உள்ளது. மாநாட்டுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து சுமார் 1000 வாகனங்களில் 15 ஆயிரம் தொண்டர்கள் செல்ல உள்ளோம் என்று கூறினார்.


Next Story