மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் போலீஸ் பாதுகாப்பில் குளறுபடி: விசாரணை நடத்த டி.ஜி.பி.யிடம் மனு
மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் போலீஸ் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து முழுமையான விசாரணை நடத்தக்கோரி டி.ஜி.பி.யிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்துள்ளார்.
சென்னை,
மதுரையில் கடந்த 20-ந்தேதி அ.தி.மு.க. மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக்கோரி மதுரை திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு கடந்த மே 31-ந்தேதி கடிதம் எழுதியிருந்தோம். மாநாடு நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு போலீசார் கடந்த ஜூலை 31-ந்தேதி அனுமதி தந்தனர். ஆனாலும் நாங்கள் கேட்டுக்கொண்டபடி கூடுதல் பாதுகாப்பு அளிக்க போலீசார் இழுத்தடித்தனர். இதனால் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தோம்.
அதையடுத்து போக்குவரத்தில் உரிய மாற்றங்கள் செய்வது, கூடுதலாக போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்துவது என போலீசார் உறுதி அளித்து, ஐகோர்ட்டிலும் அதனை உத்தரவாத அறிக்கையாக தாக்கல் செய்தனர். இதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பில் குளறுபடி
ஆனால் மாநாட்டின்போது, ஐகோர்ட்டில் கொடுத்த உத்தரவாதத்தின்படி போலீஸ் பாதுகாப்பு வழங்காதது அதிர்ச்சி அளித்தது. போக்குவரத்தில் மாற்றம் செய்யவில்லை. கூடுதலாக போலீசார் நிறுத்தப்படவில்லை. கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் ஒருசிலரே ஈடுபட்டிருந்தது அதிர்ச்சியாக அமைந்தது. இதனால் சில பிரச்சினைகளும் எழுந்தன.
தெளிவான திட்டத்தை போலீசாரிடம் நாங்கள் கொடுத்தபோதும் அதை செயல்படுத்த தவறியதுடன், ஐகோர்ட்டின் அதிகாரத்தை மீறிய செயலாகவும் இது பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சி என்பதால் எங்களிடம் இந்த போக்கை போலீசார் காட்டினார்கள் என்றே எண்ணத் தோன்கிறது. அரசியல்ரீதியான அழுத்தம் இதில் காரணமாக இருந்திருக்கும் என்று சந்தேகப்படுகிறோம். எனவே போலீசாரின் பாதுகாப்பு குளறுபடி குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கோரப்பட்டுள்ளது.
டி.ஜி.பி.யிடம் புகார் மனு அளித்தபிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
15 லட்சம் தொண்டர்கள்
மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் கலந்துகொண்டனர். அதில் உரிய எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி, இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்துள்ளேன். டி.ஜி.பி. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.
உண்ணாவிரத நாடகம்
'நீட்' தேர்வுக்கு விதை போட்டுவிட்டு, இன்று நாடாளுமன்ற தேர்தலுக்காக, 'நீட்'டை எதிர்ப்பது போல தி.மு.க.வினர் உண்ணாவிரத நாடகம் ஆடுகிறார்கள். தி.மு.க.வால் விட்டுக்கொடுக்கப்பட்ட தமிழக உரிமைகளை அ.தி.மு.க. மீட்டெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.