மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் ஆலோசனை கூட்டம்- 2 எம்.பி.க்கள் பங்கேற்பு
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 2 எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 2 எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலைய வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் அலுவலக வளாக கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. விமான நிலைய ஆலோசனை குழு தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் தலைமை தாங்கினார். இணைத்தலைவரும் எம்.பி.யுமான வெங்கடேசன், துணைத்தலைவர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், விமான நிலைய மதுரை இயக்குனர் பாபுராஜ், துணை பொது மேலாளர் ஜானகிராமன், மத்திய தொழிலில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமா மகேஸ்வரன் உள்ளிட்ட விமான நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மதுரை விமான நிலைய விரிவாக பணிகள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதித்தனர். மதுரையிலிருந்து 24 மணி நேர விமான சேவை, விமான நிலைய ஓடுதளம் பாதை விரிவாக்கம், கூடுதல் விமான நிறுத்துமிடம், மத்திய தொழில் பாதுகாப்பு படை கூடுதல் வீரர்கள் நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன. மேலும், கையகப்படுத்தப்பட்ட இடங்களில் சுற்றுசுவர் கட்டும் பணி தொடங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எம்.பி.க்கள் பேட்டி
இதனை தொடர்ந்து எம்.பி.க்கள் மாணிக்கம்தாகூர், வெங்கடேசன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக கூறியதாவது:-
இந்த கூட்டத்தில் மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சில நல்ல செய்திகள், மதுரைக்கு கிடைக்கின்றன. மதுரை விமான நிலையத்தின் நீண்டநாள் கோரிக்கையான 24 மணி நேர சேவை மற்றும் இரவுநேர விமான சேவை குறித்து விமானத்துறை நல்ல முடிவை எடுத்திருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்பு 24 மணி நேர விமான சேவை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதற்காக மத்திய விமான போக்குவரத்து, உள்துறை மந்திரியிடம் இதை பற்றி சந்தித்து கடைசி கட்டப்பணிகள் நடைபெறுகிறது. அதேபோல மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது. இதன் மூலம் மதுரை விமான நிலையம் விரைவில் மேம்பட இருக்கிறது. மதுரை விமான நிலையத்திற்கு அதிகமான பயணிகள் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. விமான கட்டணமும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.