மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து: ரூ.65 லட்சம் பொங்கல் வேட்டி-சேலைகள் எரிந்து நாசம்


மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து: ரூ.65 லட்சம் பொங்கல் வேட்டி-சேலைகள் எரிந்து நாசம்
x

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.65 லட்சம் மதிப்புள்ள பொங்கல் வேட்டி-சேலைகள் எரிந்தது.

மதுரை


மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.65 லட்சம் மதிப்புள்ள பொங்கல் வேட்டி-சேலைகள் எரிந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் தீ

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில்தான் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பு விவரங்கள் மற்றும் இதர விவரங்கள் முழுவதும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர மதுரை மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பொங்கல் பண்டிகை வேட்டி-சேலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, இந்த அலுவலகத்தில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. இதனை அங்கிருந்த ஒருவர் பார்த்து, உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரூ.65 லட்சம்

அப்போது மாவட்ட அலுவலர் சக்திவேல் நேரடியாக வந்து இந்த பணிகளை பார்வையிட்டார். சில மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் பழமையான இந்த கட்டிடத்தில் இப்போதுதான் மின் வயர்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளது என்று அலுவலர்கள் கூறுகின்றனர்.

இந்த தீ விபத்தில் 29 ஆயிரம் சேலைகளும், 12 ஆயிரத்து 500 வேட்டிகளும் எரிந்து நாசமாகி விட்டது. அதன் மதிப்பு மட்டும் ரூ.65 லட்சம் என கூறப்படுகிறது. இது தவிர சேதமான நாற்காலிகள் மற்றும் இதர பொருட்களின் விலை குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது.


Next Story