மதுரை மாநகராட்சி புதிய கமிஷனராக பிரவீன் குமார் பொறுப்பேற்பு
மதுரை மாநகராட்சி புதிய கமிஷனராக கே.ஜே.பிரவீன் குமார் பொறுப்பேற்றார். அவர் மதுரை மாநகரை அழகுப்படுத்துவேன் என்று கூறினார்.
மதுரை மாநகராட்சி புதிய கமிஷனராக கே.ஜே.பிரவீன் குமார் பொறுப்பேற்றார். அவர் மதுரை மாநகரை அழகுப்படுத்துவேன் என்று கூறினார்.
புதிய கமிஷனர்
மதுரை மாநகராட்சி கமிஷனராக இருந்த சிம்ரன்ஜீத்சிங் காலொன், சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பிரவீன்குமார் நியமனம் செய்யப்பட்டார். அவர் மாநகராட்சி அண்ணா மாளிகையில் நேற்று பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
மதுரை மாநகரம் ஒரு தொன்மையான, மிகவும் பழமையான மாநகரம். இந்த நகரத்தில் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றதில் மிக்க மகிழ்ச்சி. மதுரை மாநகரில் சீர்மிகு நகரத்திட்டம் (ஸ்மார்ட் சிட்டி), அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியின் பல்வேறு பிரிவுகளான வருவாய்பிரிவு, பொறியியல் பிரிவு, நகரமைப்பு பிரிவு மற்றும் பொது சுகாதாரப்பிரிவின் மூலம் அனைத்துப் பணிகளும் தொடர்ந்து பொதுமக்களுக்கு சேவைகள் செய்வதில் முக்கிய பங்காற்றி வருகிறது. அனைத்து வளர்ச்சி பணிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும். மதுரை மாநகரை அழகுமிக்க நகரமாக மாற்றப்படும். அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவேன். மதுரை மாநகராட்சியை முதல்நிலை மாநகராட்சியாகவும் கொண்டுவருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை உதவி கலெக்டர்
மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றுள்ள கே.ஜே.பிரவீன் குமார், கடந்த 1988-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி பிறந்தவர். கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த அவர், பெங்களூருவில் உள்ள ஆர்.வி.என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ.எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் படித்தார். பின்னர் எல் அண்டு டி நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினார். 2017-ம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே இந்திய அளவில் சிறந்த மதிப்பெண் பெற்று ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். அதனைத்தொடர்ந்து மதுரையில் உதவி கலெக்டராக தனது பணியினை தொடங்கினார். அதன்பின் கடலூரில் பணியாற்றினார். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராக பணியாற்றி வந்த நிலையில் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார். அவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பேசுவதிலும், எழுதுவதிலும் திறன் பெற்றவர்.