பதப்படுத்திய கஞ்சாவை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 2 பேருக்கு 10 ஆண்டு சிறை- மதுரை கோர்ட்டு தீர்ப்பு


பதப்படுத்திய கஞ்சாவை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 2 பேருக்கு 10 ஆண்டு சிறை- மதுரை கோர்ட்டு தீர்ப்பு
x

ரூ.3 கோடி மதிப்புள்ள பதப்படுத்திய கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

மதுரை


ரூ.3 கோடி மதிப்புள்ள பதப்படுத்திய கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

பதப்படுத்திய கஞ்சா கடத்தல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் சிலர் கஞ்சா கடத்துவதாக கடந்த 2020-ம் ஆண்டில் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருச்செந்தூர் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்செந்தூர்-பரமன்குறிச்சி சாலையில் உள்ள ஆவுடையார்குளத்தின் கரையில் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்துக்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த மோட்டார் சைக்கிளில் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 50-க்கும் மேற்பட்ட பொட்டலங்களில் காப்பி நிறத்தில் கட்டிகள் இருந்தன.

2 பேர் கைது

அவற்றை பரிசோதித்த போது, அவை 'சாரஸ்' எனப்படும் பதப்படுத்தப்பட்ட கஞ்சா என்பது தெரியவந்தது. மொத்தம் 24 கிலோ 660 கிராம் சாரஸ் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.3 கோடி என்பது தெரிந்தது.

இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் பழவிளையை அடுத்த பூவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 43) மற்றும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த துரைராஜ் (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

வெளிநாட்டுக்கு கடத்தல்

'சாரஸ்' போதைப் பொருளை தூத்துக்குடி கடற்கரை வழியாக வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு 2-வது சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் சுரேந்திரன் ஆஜரானார்.

விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதான செந்தில்குமார், துரைராஜ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டன.

10 ஆண்டு சிறை தண்டனை

இதையடுத்து அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.


Next Story