மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்கு வைகை அணையில் தண்ணீர் திறப்பு


மதுரை, திண்டுக்கல் மாவட்ட  முதல் போக பாசனத்திற்கு வைகை அணையில் தண்ணீர் திறப்பு
x

மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர்கள் இ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

தேனி


வைகை அணை

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்்த அணை மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. அணையின் நீர் இருப்பை ெபாறுத்து ஜூன் முதல் வாரம் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு போதிய நீர் இருப்பு உள்ளதால் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக நேற்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.ெபரியசாமி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி அணை மதகுகளை திறந்து வைத்தனர். அப்போது தேனி, மதுரை மாவட்ட கலெக்டர்கள் முரளிதரன், அனீஸ்சேகர், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் அணையின் 7 பிரதான மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து சென்றது. அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், அதன்பிறகு நீர் இருப்பை பொறுத்து முறைவைத்து தண்ணீர் திறக்கப்படும்.

அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் 16,452 ஏக்கர், மதுரை மாவட்ட வடக்கு தாலுகாவில் 26,792 ஏக்கர் என மொத்தம் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள்பாசன வசதி பெறும். அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 10 மணி நிலவரப்படி 62.50 அடியாக இருந்தது. நீர்வரத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story