ஜாமீன் கேட்ட 2 பேருக்கு மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை
தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கிய வழக்கில் கைதான 2 பேர் மொத்தம் ரூ.2 லட்சத்தை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு செலுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை விதித்து, ஜாமீன் வழங்கியது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 30-ந்தேதி தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் வந்தன. அதன்பேரில் அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக சிவகுமார் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல மற்றொரு சம்பவத்தில் சண்முகசுந்தரராஜன் என்பவர் ரூ.87 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கியதாக கைதானார்.
இவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார்.
அப்போது கூடுதல் அரசு வக்கீல் டி.செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரர்களில் சிவகுமார் தொடர்பான வழக்கின் பிரதான எதிரி இன்னும் கைது செய்யப்படவில்லை. மேலும் அந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. மற்றொரு மனுதாரர் சண்முகசுந்தரராஜன் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே மனுதாரர்களுக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்தார்.
விசாரணை முடிவில், மனுதாரர் சிவகுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தையும், மற்றொரு மனுதாரர் சண்முகசுந்தரராஜன் ரூ.50 ஆயிரத்தையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு செலுத்த வேண்டும். நாள்தோறும் போலீஸ்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.