மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை உறுதி


மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை உறுதி
x
தினத்தந்தி 29 Oct 2022 11:19 PM IST (Updated: 30 Oct 2022 12:11 AM IST)
t-max-icont-min-icon

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மனைவி கொலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர், வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் குடும்பப்பொறுப்பை அவரது மனைவி ஏற்கும் நிலை வந்தது. இதனால் அவர் வேலைக்குச் சென்று வந்தார். அவரது நடத்தையில் சுரேஷ் சந்தேகம் அடைந்து, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 17.1.2015 அன்று உணவு சமைக்கவில்லை என்று கூறி, ஆத்திரம் அடைந்த சுரேஷ், மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் மயங்கிவிழுந்தார். இதனால் பயந்துபோன சுரேஷ், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுரேஷின் மனைவி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சிவகாசி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டு, சுரேசுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து அவர், மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

நிரூபிக்கப்பட்டு உள்ளது

இந்த மனுவை நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல், மனுதாரர் தனது மனைவியை கொலை செய்ததாக அளித்த குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை என வாதாடினார்.

அதற்கு அரசு வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி, மனுதாரர் தன் மனைவியை கொலை செய்யும் நோக்கத்தில்தான் கழுத்தை நெரித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் இறந்து விட்டார். இந்த குற்றச்சாட்டுகளை மருத்துவ பரிசோதனைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன என்றார்.

ஆயுள் தண்டனை உறுதி

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

சம்பவம் நடந்த இடத்தில் மனுதாரரும், அவருடைய மனைவியும் மட்டும்தான் இருந்துள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் சந்தர்ப்ப சாட்சிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் முழுமையாக நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு சாட்சியமும் தொடர்ச்சியான சங்கிலி போல ஒரே சம்பவத்தை எடுத்துரைக்க வேண்டும். அப்போது தான் சந்தர்ப்ப சாட்சியங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியும்.

அந்த வகையில் மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசு தரப்பில் ஒவ்வொரு சூழ்நிலையையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. எனவே மனுதாரருக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்யப்படுகிறது. இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story