2-வது மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை உறுதி -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
2-வது மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை உறுதி என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
தென்காசி மாவட்டம் குற்றாலத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி இறந்ததால், கடந்த 2008-ல் குத்தாலம் என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன், கடந்த 2013-ல் மனைவி குத்தாலத்தை கழுத்தை நெரித்து கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டுள்ளார். இந்த சம்பவத்தை தற்கொலை வழக்காக பதிவு செய்த குற்றாலம் போலீசார், பின்னர் கொலை வழக்காக மாற்றி கண்ணனை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தென்காசி மாவட்ட கோர்ட்டு, கடந்த 19.8.2019 அன்று கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் ஆகியோர், இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். தென்காசி மாவட்ட கோர்ட்டு கண்ணனுக்கு விதித்த ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது. மனுதாரரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.