ரேக்ளா பந்தயங்களை நடத்த விதிகளை வகுத்து அனுமதிக்கலாம் -போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ரேக்ளா பந்தயங்களை நடத்த விதிகளை வகுத்து அனுமதிக்கலாம் என போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ரேக்ளா பந்தயங்களை நடத்த விதிகளை வகுத்து அனுமதிக்கலாம் என போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அனுமதி கேட்டு வழக்கு
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனவேந்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா பொன்காடு கிராமத்தில் உள்ள அடைகாத்தான் அய்யனார் சுவாமி கோவில் திருவிழா நடக்க உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளோம். இதேபோல எங்கள் கிராமத்தில் கடந்த ஆண்டு ரேக்ளா பந்தயம் நடந்தது.
இந்த ஆண்டும் ரேக்ளா பந்தயம் நடத்துவது தொடர்பாக அனுமதிக்கும்படி கடந்த 23-ந் தேதி அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே திட்டமிட்டபடி எங்கள் கிராமத்தில் ரேக்ளா பந்தயம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
அனுமதி வழங்கலாம்
இந்த மனு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், கிராம மக்களின் அனைத்து பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், விதிமுறைகளையும் வகுத்து போலீசார் அனுமதி வழங்கலாம் என கருத்து தெரிவித்தனர்.
பின்னர், மனுதாரரின் கிராமத்தில் வருகிற 5-ந்தேதி நடக்க உள்ள மாட்டு வண்டி, குதிரை வண்டி போன்ற ரேக்ளா பந்தயத்திற்கு உரிய விதிமுறைகளுடன் அனுமதி வழங்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.