மதுரையில் நகைக்கடை அதிபர் கொலையில்பிரபல ரவுடிகள் உள்பட 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது


மதுரையில் நகைக்கடை அதிபர் கொலையில்பிரபல ரவுடிகள் உள்பட 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

மதுரையில் நகைக்கடை அதிபர் கொலையில் பிரபல ரவுடிகள் உள்ளிட்ட 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரையில் நகைக்கடை அதிபர் கொலையில் பிரபல ரவுடிகள் உள்ளிட்ட 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

நகைக்கடை அதிபர் கொலை

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). இந்து மக்கள் கட்சி நிர்வாகியான இவர் ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் மெயின் ரோட்டில் நகைக்கடை வைத்திருந்தார். கடந்த ஜனவரி 31-ந் தேதி இரவு கடையை பூட்டி சென்ற போது இவரை முகமூடி அணிந்து வந்த ஒரு கும்பல் வழிமறித்து கொலை செய்தது. இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் கோர்ட்டு ஏட்டுவாக வேலை பார்த்து வந்த ஹரிஹரபாபுவிற்கும் கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கும் நட்பு இருந்து வந்தது. நகைக்கடைக்கு ஏட்டு தனது 2-வது மனைவியுடன் அடிக்கடி வந்து நகை வாங்கி செல்வது வழக்கம். அந்த பழக்கத்தில் மணிகண்டனுக்கும், ஏட்டு மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஏட்டு ஹரிஹரபாபு, நகைக்கடை அதிபர் மணிகண்டனை கொலை செய்ய கூலிப்படையை தயார் செய்தார். அவர்கள் சம்பவத்தன்று அவரை கொலை செய்து விட்டு தப்பி விட்டனர்.

8 பேர் குண்டர் சட்டத்தில் கைது

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் பிரபல ரவுடிகள் என்பதால் அனைவரையும் உடனே கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் ஜெய்ஹிந்த்புரம் பாரதியார்ரோடு நேதாஜி நகர் முதல் தெரு அய்யப்பன் (26), பாரதியார் ரோடு தேவர் நகர் கார்த்திக் (26), அழகுபாண்டி (26), மணிகண்டன் (28), அஜித்குமார் (19) டி.எஸ்.நகர் முத்துபாண்டி (24), வில்லாபுரம் ஹைதர்அலி (24), டி.வி.எஸ்.நகர் தினேஷ்குமார் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் மீது நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளன. எனவே இவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்த போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர். இதன் மூலம் ஒரே வழக்கில் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்வது மதுரையில் இதுவே முதல் முறை என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story