மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ரூ.10 லட்சத்தில் 20 நகரும் நிழற்குடைகள்- திருப்பதி கோவில் முன்னாள் அதிகாரி வழங்கினார்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு  ரூ.10 லட்சத்தில் 20 நகரும் நிழற்குடைகள்- திருப்பதி கோவில் முன்னாள் அதிகாரி வழங்கினார்
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ரூ.10 லட்சத்தில் 20 நகரும் நிழற்குடைகளை திருப்பதி கோவில் முன்னாள் அதிகாரி வழங்கினார்

மதுரை


உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமில்லாமல், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ஒருவர் மேற்கு கோபுரம் வழியாக கோவிலுக்குள் நுழைந்தார். அப்போது திடீரென்று மழை பெய்தது. மழைக்கு பக்தர்கள் ஒதுங்க இடம் தேடி அங்கிருந்த நிழற்குடை பகுதிக்கு ஓடினர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. நிறைய பக்தர்களால் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைக்கண்ட அந்த நபர், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இவ்வாறு சிரமப்படக்கூடாது என்று நினைத்தார். நேராக கோவில் அலுவலகத்திற்கு சென்று எனது பெயர் நாகராஜராவ், திருப்பதி தேவஸ்தானத்தில் உதவி அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்று விட்டேன். பக்தர்கள் மழையில் நனைவதை கண்டவுடன் அங்கு நிழற்குடை போன்று செய்வதற்கு என்னால் ஆன உதவிகளை செய்கிறேன் என்றார்.

உடனே அதிகாரிகள் ஒரு நிழற்குடை செய்வதற்கு 50 ஆயிரம் ரூபாய் ஆகும் என்றனர். உடனே அவர் 20 நிழற்குடை செய்வதற்கு தேவையான 10 லட்சம் ரூபாயை தருவதாக கூறி காசோலையை வழங்கினார்.

பின்னர் கோவில் என்ஜினீயர்கள் அந்த நகரும் நிழற்குடைகளை உருவாக்கி, அவருக்கு பாராட்டு தெரிவிக்க எண்ணினர். அதன்படி திருப்பதியில் இருந்து அந்த முன்னாள் அதிகாரி நாகராஜராவை வரவழைத்து கோவில் சார்பில் மரியாதை செய்து புதிதாக செய்துள்ள நகரும் நிழற்குடைகளை காண்பித்தனர். பின்னர் அதனை பக்தர்களுக்காக வேண்டிய இடத்தில் நிறுத்தி வைத்து கொள்ளுமாறு தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றார். திருப்பதி கோவில் முன்னாள் அதிகாரி, மீனாட்சி அம்மனின் பக்தர்களுக்காக 20 நகரும் நிழற்குடைகள் வழங்கியது பாராட்டை பெற்றது.


Next Story