மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மரணம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. அஞ்சலி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கார் கருமுத்து கண்ணன் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று மதியம் தகனம் செய்யப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. அஞ்சலி செலுத்தினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கார் கருமுத்து கண்ணன் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று மதியம் தகனம் செய்யப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. அஞ்சலி செலுத்தினர்.
கருமுத்து கண்ணன்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 18 ஆண்டுகளாக அறங்காவலர் குழு தலைவராக இருந்து வந்தவர் பிரபல தொழிலதிபர் கருமுத்து கண்ணன் (வயது 70). கடந்த சில நாட்களாக இவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அருகே உள்ள கோச்சடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கருமுத்து கண்ணன் நேற்று காலை மரணம் அடைந்தார். அவரது மரண செய்தி அறிந்ததும் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருவதுடன் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
மரணமடைந்த கருமுத்து கண்ணன் கடந்த 1953-ம் ஆண்டு கருமுத்து தியாகராஜர்-ராதா தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவர் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராஜர் கலைக் கல்லூரி, திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் தலைவராகவும், தியாகராஜர் மில்ஸ், மீனாட்சி மில்ஸ், லட்சுமி மில்ஸ் போன்ற ஆலைகளின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
மீனாட்சி கோவில் புனரமைப்பு
இவர் முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா என இருவரின் அபிமானத்தையும் பெற்றவராக இருந்தார். மீனாட்சி அம்மன் கோவிலில் இவரது பதவி காலத்தில் பல்வேறு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன. கடந்த 2009-ம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதில் மீனாட்சி அம்மன் சன்னதி விமானம் தங்க கோபுரமாக மாற்றப்பட்டது. இது தவிர மீனாட்சி அம்மன் கோவில் உப கோவில்களான தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், திருவாதவூர் உள்ளிட்ட கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த கருமுத்து கண்ணன் ஏற்பாடு செய்தார். மேலும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள், இடங்களை மீட்க துரித நடவடிக்கை மேற்கொண்டார்.
மீனாட்சி அம்மன் கோவிலை தவிர திருக்கடையூர் சுவாமி சன்னதி, சிக்கல் மற்றும் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் ராஜகோபுரம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு திருப்பணிகளை செய்துள்ளார்.
கருமுத்து கண்ணனுக்கு மத்திய அரசு ஜவுளிக்குழு தலைவராக பதவி கொடுத்தது. அதுதவிர தமிழக அரசு பெருந்தலைவர் காமராஜர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும், கவுரவ பதவிகளும் வழங்கியுள்ளன. கருமுத்து கண்ணனுக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்களும் உள்ளனர். இரண்டு மகள்களும் வெளிநாட்டில் உள்ளனர். அவர்களுக்கு தந்தை இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
கருமுத்து கண்ணனின் உடல் கோச்சடையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், பெரியகருப்பன், கனிமொழி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தளபதி, வெங்கடேசன், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. , ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துரைவைகோ, பா.ஜ.க. சார்பில் மூத்த தலைவர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன், தொழில் அதிபர்கள் ராம்கோ சீனிவாசன், வடமலையான் புகழகிரி, வேலம்மாள் முத்துராமலிங்கம் உள்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மீனாட்சி அம்மன் கோவில் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது இறுதி சடங்குகள் மற்றும் உடல் தகனம் இன்று காலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.