மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வலைவீசி தெப்பத்திருவிழா - பக்தர்கள் சாமி தரிசனம்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த வலைவீசி தெப்பத் திருவிழா மற்றும் மச்சகந்தி விவாகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த வலைவீசி தெப்பத் திருவிழா மற்றும் மச்சகந்தி விவாகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மீனாட்சி கோவிலில் தை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டு தை மாத தெப்பத்திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் நாட்களில் காலை, இரவு என இருவேளையும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

இந்த திருவிழாவில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதில் வலைவீசி அருளிய லீலை ஆகும். இந்த விழாவையொட்டி சுவாமியும், அம்மனும் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து கிளம்பி மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள எல்லீஸ் நகர் பாலத்திற்கு கீழே உள்ள வலைவீசி தெப்பக்குளம் பகுதிக்கு செல்வர். அங்கு லீலை முடிந்து மீண்டும் கோவிலை வந்தடைவது வழக்கம்.

வலைவீசி திருவிழா

ஆனால் கடந்த கொரோனா காலக்கட்டமான 2021, 2022-ம் ஆண்டு சுவாமி அங்கு செல்லவில்லை. தற்போது அந்த இடத்தில் வேறு ஒரு நிகழ்வு நடப்பதால் சுவாமி அங்கு செல்லாமல் கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வலைவீசி அருளிய திருவிளையாடல் லீலை நேற்று காலை நடந்தது. அப்போது பெரிய தாம்பூலத்தில் 2 வெள்ளி மீன்களை வலைவீசி பிடிப்பது போன்று பிடித்து அதனை சுந்தரேசுவரர் சுவாமிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் சுவாமி-பார்வதி தேவியை திருமணம் செய்து கொள்ளும் மச்சகந்தி விவாகம் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மீனாட்சி, சுந்தரேசுவரரை வணங்கி சென்றனர்.

விழாவில் தை தெப்பத்திருவிழா வருகிற 4-ந் தேதி நடக்கிறது. இதற்காக காமராஜர் சாலை மாரியம்மன் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த தெப்பத்திருவிழாவிற்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நாளை (வியாழக் கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. அதை தொடர்ந்து 3-ந் தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா நடைபெறுகிறது.

தெப்பத்திருவிழா

விழாவில் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 4-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமியும் அதிகாலை மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலையில் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் சுவாமி தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாசலம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.


Next Story