ரெயில் நிலைய கட்டுமான பணிகள் குறித்து மதுரை எம்.பி. நேரில் ஆய்வு


ரெயில் நிலைய கட்டுமான பணிகள் குறித்து மதுரை எம்.பி. நேரில் ஆய்வு
x

ரெயில் நிலைய கட்டுமான பணிகள் குறித்து மதுரை எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.

மதுரை


மதுரை ரெயில் நிலைய மறுமேம்பாட்டு பணிகள் குறித்து எம்.பி.வெங்கடேசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை ரெயில் நிலையத்தை புதுப்பிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.347 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2061-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டு கணிப்பின் படி, மதுரை ரெயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. பிளாட்பாரங்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் 36 மாதங்களில் முடிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ரெயில் நிலையத்திற்குள் பயணிகள் நுழைய தனிப்பாதையும், வெளியேற தனிப்பாதையும் அமைக்கப்படுகிறது. இருசக்கர வாகனத்துக்கு தனி காப்பகம் கட்டப்படுகிறது. பயணிகள் காத்திருக்கும் அறையில் 1,600 இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. மூத்தகுடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று ரெயில்வே நிலைக்குழு பரிந்துரைத்த பின்னரும், மத்திய அரசு முதியோர்கள் மீது கருணையில்லாமல் உள்ளது. கூடுதல் ரெயில்கள் இயக்கம், டிக்கெட் கட்டண சலுகை குறித்து வருகிற 10-ந் தேதி நடக்கவுள்ள எம்.பி.க்கள் ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம்.

கூடல்நகரில் தற்காலிகமாக சாலை வசதி அமைக்க மாநகராட்சி கமிஷனரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கூடல்நகரில் ரெயில்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து, மதுரை ரெயில் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுமான பணிகளில் இடம்பெற உள்ள சிறப்பம்சங்கள் குறித்து மதுரை கோட்ட கட்டுமான பிரிவு துணைத்தலைமை என்ஜினீயர் நந்தகோபால் விளக்கமளித்தார்.

இந்த ஆய்வின் போது, மதுரை ரெயில் நிலைய தலைமை வர்த்தக ஆய்வாளர் மணிகண்டன், கோட்ட மேலாளர் அலுவலக நெறிமுறை ஆய்வாளர் ராதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story