மதுரை ரெயில்வே போலீஸ் சோதனையில் ரெயிலில் ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா கடத்தியவர் கைது


மதுரை ரெயில்வே போலீஸ் சோதனையில்  ரெயிலில் ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா கடத்தியவர் கைது
x

கொல்கத்தாவில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி செல்லும் ரெயிலில் ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா கடத்தி வந்த நபரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

மதுரை


கொல்கத்தாவில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி செல்லும் ரெயிலில் ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா கடத்தி வந்த நபரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா புழக்கம்

தமிழகத்தில் இளைஞர் சமுதாயத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுப்பதற்காக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், போதைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மட்டுமின்றி அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், விலை குறைவான கஞ்சா பொட்டலங்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்த பொட்டலங்கள் 5 கிலோ, 7 கிலோ மற்றும் 10 கிலோ எடையில் ரெயில்கள் மூலமாக கடத்தி வரப்படுகிறது.

அதனை தொடர்ந்து, ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. வனிதா உத்தரவின் பேரில், ரெயில்வே போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தமிழகத்திற்குள் வந்து செல்லும் ரெயில்களில் தினமும் சோதனை செய்யப்படுகிறது. அங்கு மொத்த விலையில் கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு வாங்கிவந்து தமிழகத்திற்குள் கிலோ ரூ.10 ஆயிரம் வரை ஒரு கும்பல் விற்பனை செய்து வருகிறது. இதற்காக வெளிநாட்டுக்கு செல்லும் குருவி போல, கஞ்சா கடத்தலுக்கு உள்ளூர் குருவிகளை பயன்படுத்துகின்றனர்.

ரூ.95 ஆயிரம் மதிப்பு

இந்த கடத்தலுக்கு தென்மத்திய ரெயில்வே மண்டலத்தில் பணியாற்றும் சிலர் உடந்தையாக இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுரை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமுனியாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விஜயவாடாவில் இருந்து மதுரைக்கு முன்பதிவு செய்து எஸ்.9 பெட்டியின் 9-வது இருக்கையில் பயணம் செய்த பயணி ஒருவரிடமும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, தனிப்படையினரின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக அவர் பதிலளித்தார்.

பின்னர்அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது அதில் ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள 9½ கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த தனிப்படையினர் இது குறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமிக்கு தகவல் கொடுத்தனர். ரெயில் மதுரை ரெயில் நிலையம் வந்த போது, அந்த நபரிடம் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார்.

கைது

விசாரணையில் கஞ்சா கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது உசிலம்பட்டி பூதிப்புரத்தை சேர்ந்த சுப்பு (வயது 64) என்பது தெரியவந்தது. தொடர் விசாரணைக்கு பின்னர் அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ரூ.12 ஆயிரத்தை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story