மதுரை ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகளை பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு


மதுரை ரெயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள் மற்றும் திருச்சி-மதுரை ரெயில் பாதையை தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ஆய்வு செய்தார்.

மதுரை


மதுரை ரெயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள் மற்றும் திருச்சி-மதுரை ரெயில் பாதையை தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ஆய்வு செய்தார்.

மேம்பாட்டு பணிகள்

தென்னக ரெயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, பாலக்காடு, எர்ணாகுளம், திருவனந்தபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு நடத்தி வருகிறார். இதற்கிடையே, மதுரை ரெயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து நேற்று ஆய்வு செய்தார். அப்போது மதுரை ரெயில் நிலையத்தின் கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் நடந்து வரும் அலுவலக கட்டுமான பணிகள், நடைபாதை பணிகள், ஆர்.எம்.எஸ். ரோட்டில் நடந்து வரும் துணை மின்நிலைய கட்டுமான பணிகள், ரெயில்வே பாதுகாப்பு படை கட்டுமான பணிகள் ஆகியன குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு பணியின் போது, பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கட்டுமான பணிகளில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்த வேண்டும். அத்துடன் பாதுகாப்பு கவசங்கள், உபகரணங்கள் இல்லாத பணியாளர்களுக்கு உடனடியாக அவற்றை வழங்க வேண்டும். பொதுமக்களுக்கோ, பயணிகளுக்கோ கட்டுமான பணிகளால் எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என உத்தரவிட்டார்.

ஆய்வு

முன்னதாக திருச்சியில் இருந்து மதுரை வரும் ரெயில் பாதை, சுரங்கப்பாதை, ரெயில் நிலையங்கள் ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக சிறப்பு ஆய்வு ரெயிலில் (ஸ்பிக்) அவர் திருச்சியில் இருந்து மதுரை வரை பயணம் செய்தார். இந்த வாகனத்தில் இருந்தவாறே ரெயில் தண்டவாளங்களின் ஸ்திரத்தன்மை, வளைவுகளின் அளவு, குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும் பகுதி, அனுமதிக்கப்பட்ட வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும் பகுதி, வேகம் அதிகரிக்க வேண்டிய பகுதி குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது, மதுரை கோட்ட மேலாளர் அனந்த், தென்னக ரெயில்வே கட்டுமான பிரிவு (தெற்கு) தலைமை என்ஜினீயர் தவமணிப்பாண்டி, மதுரை கட்டுமானப்பிரிவு துணைத்தலைமை என்ஜினீயர் நந்தகோபால், ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் சுபாஷ் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக பொதுமேலாளரின் ஆய்வுப்பணியை தொடர்ந்து மதுரை ரெயில் நிலைய வளாகத்தை சுற்றிலும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Related Tags :
Next Story