மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் வருகிற 27-ந் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரெயிலாக குருவாயூர் வரை நீட்டிப்பு முன்பதிவு பெட்டிகள் இணைப்பு


மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் வருகிற 27-ந் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரெயிலாக குருவாயூர் வரை நீட்டிப்பு முன்பதிவு பெட்டிகள் இணைப்பு
x
தினத்தந்தி 19 Aug 2023 8:02 PM GMT (Updated: 19 Aug 2023 8:02 PM GMT)

மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் வருகிற 27-ந் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு குருவாயூர் வரை இயக்கப்படுகிறது.

மதுரை


மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் வருகிற 27-ந் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு குருவாயூர் வரை இயக்கப்படுகிறது.

3 ரெயில்கள் இணைப்பு

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட மதுரை-செங்கோட்டை ரெயிலையும், செங்கோட்டை-குருவாயூர் ரெயிலையும் இணைக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளரிடமும் வலியுறுத்தப்பட்டது. பயணிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ரெயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், இந்த ரெயிலை நீட்டிப்பு செய்ய பரிந்துரை செய்து மதுரை கோட்ட மேலாளர் அலுவலகம் தென்னக ரெயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் எழுதியது.

இந்தநிலையில், மதுரை-செங்கோட்டை ரெயிலை குருவாயூர் வரை நீட்டிப்பு செய்து ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, மதுரை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06663/06503), செங்கோட்டை-கொல்லம் எக்ஸ்பிரஸ் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06659/06660) மற்றும் புனலூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16327/16328) ஆகிய 3 ரெயில்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ரெயிலாக இயக்கப்பட உள்ளது.

மதுரை-செங்கோட்டை ரெயில்

இதில் குருவாயூர்-புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16328) குருவாயூரில் இருந்து தினமும் அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.45 மணிக்கு புனலூர் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் புனலூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16327) புனலூரில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.10 மணிக்கு குருவாயூர் சென்றடைகிறது.

மதுரை-செங்கோட்டை ரெயில் (வ.எண்.06663) மதுரையில் இருந்து தினமும் நண்பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு மாலை 3.20 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் செங்கோட்டை-மதுரை ரெயில்(வ.எண்.06503) செங்கோட்டையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. செங்கோட்டை-கொல்லம் ரெயில்(வ.எண்.06659) செங்கோட்டையில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் கொல்லம்-செங்கோட்டை ரெயில்(வ.எண்.06660) கொல்லத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.40 மணிக்கு செங்கோட்டை வந்தடைகிறது.

வருகிற 27-ந் தேதி முதல்...

தற்போது இந்த 3 ரெயில்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 27-ந் தேதி முதலும், குருவாயூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 28-ந் தேதி முதலும் இயக்கப்பட உள்ளது. அதன்படி, மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16327) மதுரையில் இருந்து தினமும் நண்பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.10 மணிக்கு குருவாயூர் ரெயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் குருவாயூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16328) குருவாயூரில் இருந்து தினமும் அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். இந்த ரெயிலில் ஒரு 3 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 9 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

ரெயில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநுகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, நியூ ஆரியங்காவு, எடப்பாளையம், கல்துருத்தி, தென்மலை, ஓட்டக்கல், எடமன், புனலூர், அவனீசுவரம், கூரி, கொட்டாரக்கரை, எழுகோன், குந்த்ரா, சந்தனதோப்பு, கிளிக்கொள்ளூர், கொல்லம், சாஸ்தன்கோட்டை, கருங்காப்பள்ளி, காயங்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, செங்கனச்சேரி, கோட்டயம், எட்டுமானூர், குருப்பன்துறை, வைக்கம் ரோடு, பிரவம் ரோடு, மூலான்துருத்தி, திருப்புனித்துறை, எர்ணாகுளம் டவுன், இடப்பள்ளி, களமச்சேரி, ஆலுவா, அங்கமாலி, திருச்சூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். குருவாயூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டும் பூங்குன்னம், ஒல்லூர், புதுக்காடு, இரிஞ்சாலக்குடா, சாலக்குடி, காருக்குட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நேரம் மாற்றம்

மதுரை-குருவாயூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்துக்காக கொல்லத்தில் இருந்து மதுரை வழியாக சென்னை வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் கொல்லம்-ஆரியங்காவு இடையே நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கொல்லம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16102) வருகிற 27-ந் தேதி முதல் கொல்லத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும். குந்தராவில் இருந்து மதியம் 12.15 மணிக்கும், கொட்டாரக்கரையில் இருந்து மதியம் 12.25 மணிக்கும், அவனீசுவரத்தில் இருந்து மதியம் 12.35 மணிக்கும், புனலூரில் இருந்து மதியம் 12.55 மணிக்கும், ஆரியங்காவில் இருந்து மதியம் 2.14 மணிக்கும் புறப்படும்.

ஏற்கனவே, மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் ரெயில் (வ.எண்.06504) செங்கோட்டையில் இருந்து கொல்லம் வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் செங்கோட்டைக்கு காலை 10.35 மணிக்கு சென்றடைகிறது. அங்கிருந்து இந்த ரெயில் (வ.எண்.06659) நண்பகல் 11.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.40 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story