மதுரை-திருமங்கலம் இரட்டை அகலப்பாதை பணி: - தென்மாவட்ட ரெயில் போக்குவரத்தில் திடீர் மாற்றம்
மதுரை-திருமங்கலம் இடையே இரட்டை அகலப்பாதைக்காக தண்டவாளங்களை இணைப்பது உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளுக்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் வருகிறது.
மதுரை-திருமங்கலம் இடையே இரட்டை அகலப்பாதைக்காக தண்டவாளங்களை இணைப்பது உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளுக்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் வருகிறது.
இரட்டை அகலப்பாதை
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட மதுரை-வாஞ்சி மணியாச்சி, தூத்துக்குடி, நெல்லை இடையே இரட்டை அகலப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்த பணிகளில் தூத்துக்குடி, நெல்லையில் இருந்து திருமங்கலம் வரையிலான இரட்டை அகலப்பாதை பணிகள் முடிந்து அனைத்து ரெயில்களும் அந்த பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, மதுரை-திருமங்கலம் இடையேயான 19 கி.மீ. தூரத்துக்கான பணிகள் மட்டும் நடைபெறாமல் இருந்தது. தற்போது அந்த பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. அடுத்தக்கட்டமாக இரட்டை அகலப்பாதையில் தண்டவாளங்களை மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ரெயில் நிலையங்களில் இணைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. தண்டவாளங்களை இணைக்கும் பணிகளுடன் மின்மயமாக்கல் பணிகள், சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பணிகள், பிளாட்பார நீட்டிப்பு பணிகள் என என்ஜினீயரிங், கட்டுமான துறை சார்ந்த அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடக்க உள்ளன.
இதற்காக இந்த பாதையில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த பணிகளை நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற மார்ச் மாதம் 3-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் நடக்கும் நாட்களில் மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ரெயில் நிலையங்களில் ரெயில் போக்குவரத்து முழுமையாகவும், பகுதியாகவும் தடை செய்யப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கைக்கு சென்னையில் உள்ள தென்னக ரெயில்வே பொதுமேலாளர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
போக்குவரத்து மாற்றம்
அதனை தொடர்ந்து, நாளை, 27-ந் தேதி, 30-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16343) கூடல்நகர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில், வருகிற 27-ந் தேதி, 28-ந் தேதி, 31-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை மதுரை-திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16344) மதுரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.2267122672) வருகிற 27-ந் தேதி, 28-ந் தேதி, 31-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 3,4-ந் தேதிகளில் இரு மார்க்கங்களிலும் மதுரை ரெயில் நிலையத்தின் 1-வது பிளாட்பாரத்துக்கு பதிலாக 3-வது பிளாட்பாரத்தில் இருந்து இயக்கப்படும்.
பயணிகளுக்கான வசதி
பிற ரெயில்களின் இயக்கத்தில் உள்ள மாற்றங்கள் குறித்து, அவ்வப்போது மதுரை கோட்ட இயக்கப்பிரிவு மூலம் பயணிகளுக்கு தெரியப்படுத்தப்படும். இதற்கிடையே, கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்களை இயக்கும் போது, அங்கு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, கூடல்நகர் மெயின்ரோட்டில் இருந்து ரெயில் நிலையம் வரை செல்லும் ரோடு மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் போதிய விளக்கு வெளிச்சம் கிடையாது. ரெயில் நிலையத்தில் இருந்து நகருக்குள் வருவதற்கு பஸ் வசதி கிடையாது. இது போன்ற பிரச்சினைகளை தீர்க்கவும் ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.