தொடர்மழை எதிரொலி: வைகை ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்
தொடர் மழை காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது.
தொடர் மழை காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது.
தண்ணீர் திறப்பு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வைகை அணையை சுற்றி உள்ள பகுதிகளிலும் அதிக மழை பெய்து வருவதால், அணையில் இருந்து உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதுபோல், மதுரை மாவட்டத்திலும் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால், மதுரையில் உள்ள வைகை ஆற்றில் அதிக அளவு வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளம் சிம்மக்கல் யானைக்கல் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்கிறது. மேலும், அதன் இருபுறமும் உள்ள சாலைகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி இருக்கிறது.
போக்குவரத்து நெருக்கடி
ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் வகையில் ஆற்றின் இருகரைகளிலும் உள்ள இணைப்பு சாலையில் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இணைப்பு சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், சிம்மக்கல், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதுபோல், மதுரை நகரில் முக்கியப் பாலங்கள் மற்றும் வைகை ஆற்றின் கரையோரங்களில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை ஏ.வி. மேம்பாலத்தில் நின்றபடி மக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். அதிக அளவு வெள்ளம் வருவதால், மதுரை மாவட்டத்தில் வைகையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. ஆற்றில் குளிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நிரம்பி வரும் நீர்நிலைகள்
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பெய்த தொடர்மழை காரணமாக நீர் நிலைகள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இதனால் மதுரை மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். புறநகர் பகுதிகளில் விவசாய பணிகளும் தீவிரமாக நடக்கிறது.