மாகாளியம்மன் பண்டிகை
கோத்தகிரி அருகே மாகாளியம்மன் பண்டிகை நடந்தது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் இன மக்களின் பண்டிகைகளில், மாகாளியம்மன் பண்டிகையும் முக்கியமான ஒன்று. கோத்தகிரி அருகே நெடுகுளா, குருக்குத்தி, ஒசஹட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு சொந்தமான மாகாளியம்மன் கோவில் நெடுகுளா கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் உள்ளது. இக்கோவிலில் நடப்பாண்டிற்கான பண்டிகை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருந்து வீடு தோறும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அம்மன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, மாலை 6 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு கிடாய் விருந்து அளிக்கப்பட்டது. இந்த பண்டிகையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.