மாயமான தொழிலாளி அடித்துக்கொலை
கன்னியாகுமரியில் மாயமான தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஒரு மாதத்திற்கு பின்பு எலும்பு கூடாக மீட்கப்பட்டது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் மாயமான தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஒரு மாதத்திற்கு பின்பு எலும்பு கூடாக மீட்கப்பட்டது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி மாயம்
கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது36), தொழிலாளி. இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற செல்வராணி. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உண்டு.
கண்ணன் கடந்த மாதம் 18-ந் தேதி திடீரென மாயமானார். இதுதொடர்பாக அவரது மனைவி செல்வராணி கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது கண்ணனை கடைசியாக கன்னியாகுமரி அருகே உள்ள சுண்டன்பரம்பை சேர்ந்த பாலன், சாமிதோப்பை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் அழைத்து சென்றது தெரியவந்தது.
2 பேரிடம் விசாரணை
இதைத் தொடர்ந்து பாலன் மற்றும் விக்னேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். முதலில் 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினர். இதையடுத்து 2 பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது சம்பவத்தன்று கண்ணன், பாலன் மற்றும் விக்னேஷ் ஆகிய 3 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்தனர். அப்போது கண்ணனுக்கும், பாலனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து கண்ணனை கல்லால் அடித்து கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் கண்ணனின் உடலை சுசீந்திரம் ஆசிரமம் அருகே உள்ள ஊட்டுவாழ்மடம் செல்லும் பாதையில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
ேமற்கண்ட விவரங்கள் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் நேற்று ஊட்டுவாழ்மடம் செல்லும் பாதையில் சென்று பார்வையிட்டனர்.
எலும்பு கூடு
அப்போது அங்கு ஒரு மனித எலும்பு கூடு கிடந்தது. எலும்பு கூட்டின் அருகே ஒரு சட்டை கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி கண்ணனின் மனைவியிடம் காண்பித்தனர். அப்போது அது தனது கணவர் அணிந்திருந்த சட்டை தான் என்பதை அவர் உறுதிபடுத்தினார். அத்துடன் சட்டையை கண்டவுடன் அவர் கண்ணீர் விட்டு கதறினார்.
இதைத் தொடா்ந்து எலும்பு கூடாக கிடந்தது கண்ணனின் உடல்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். பின்னர் துண்டு துண்டாக கிடந்த எலும்பு கூட்டை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பாலன் மற்றும் விக்னேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரு மாதத்திற்கு முன்பு மாயமான தொழிலாளி கொலை செய்யப்பட்டு எலும்பு கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.