மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு
சுல்தான்பத்தேரிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கேரள முதன்மை தலைமை வன பாதுகாவலர் உத்தரவிட்டார்.
கூடலூர்,
சுல்தான்பத்தேரிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கேரள முதன்மை தலைமை வன பாதுகாவலர் உத்தரவிட்டார்.
மக்னா யானை
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா பகுதியில் அட்டகாசம் செய்து வந்த மக்னா யானை பாப்பாத்தி என்ற பெண்ணை தாக்கி கொன்றது. இதைத்தொடர்ந்து கும்கி யானைகள் உதவியுடன் பல நாட்களாக கண்காணித்து மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் கடந்த மாதம் 8-ந் தேதி மக்னா யானையை பிடித்தனர்.
தொடர்ந்து ரேடியோ காலர் பொருத்தி முதுமலை காங்கிரஸ் மட்டம் வனப்பகுதியில் விட்டனர். பின்னர் மக்னா யானை அங்கிருந்து ஒவ்வொரு பகுதிக்கும் இடம் பெயர்ந்தது. அதை தடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்ட நிலையில் நேற்று முன்தினம் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி ஊருக்குள் அதிகாலை 3 மணிக்கு மக்னா யானை புகுந்தது.
போராட்டம்
தொடர்ந்து சாலையில் நடந்து சென்ற சுபேர் என்ற தம்பி என்பவரை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காட்டு யானை அங்கிருந்து குப்பாடி வனப்பகுதிக்குள் சென்றது.
தகவல் அறிந்த முத்தங்கா சரணாலய வனத்துறையினர் விரைந்து வந்து 2 கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே சுல்தான்பத்தேரி நகராட்சி பகுதி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மக்னா யானையை பிடித்து முத்தங்கா சரணாலய முகாமில் அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வனத்துறை அலுவலகம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயக்க ஊசி
இந்தநிலையில் கேரள முதன்மை தலைமை வன பாதுகாவலர் கங்கா சிங் வன அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், கூடலூர் பகுதியில் பிடித்து வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை சுல்தான்பத்தேரி ஊருக்குள் வருவதால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும். தொடர்ந்து முத்தங்கா சரணாலயத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து முத்தங்கா சரணாலய கால்நடை டாக்டர் அருண் சக்கரியா தலைமையிலான மருத்துவ குழுவினர் சுல்தான்பத்தேரி பகுதியில் முகாமிட்டு தயார் நிலையில் உள்ளனர்.
தொடர்ந்து வனத்துறையினரும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் காட்டு யானையை பிடிக்கும் வரை பொதுமக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மிகுந்த கவனமுடன் வெளியே வர வேண்டுமென எச்சரித்து உள்ளனர்.