நடராஜர் கோவிலில் சித்திரை மாத மகா அபிஷேகம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சித்திரை மாத மகா அபிஷேகம்
சிதம்பரம்
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
ஆனித்திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.
அந்த வகையில் சித்திரை மாத மகாபிஷேகம் நேற்று இரவு நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட நடராஜர், சிவகாம சுந்தரி ஆகிய சாமிகள் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணி முதல் இரவு 11 மணி வரை மகா அபிஷேகம் நடந்தது. அப்போது ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு விபூதி, பால், தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீா், பன்னீா், சந்தனம் புஷ்பம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மகா அபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதா்கள் செய்திருந்தனர்.
முன்னதாக நேற்று காலை கோவிலின் கிழக்கு கோபுரம் வாசல் அருகே ஸ்ரீ சபையில் 600 கலசங்கள் வைத்து அதிருத்ர ஜெபம் நடந்தது.