மகா கணபதி கோவில் குடமுழுக்கு விழா
குத்தாலம் அருகே கண்டியூரில் மகா கணபதி கோவில் குடமுழுக்கு விழா நடந்தது
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கண்டியூர் கிராமத்தில் சுந்தர மகா கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழாவானது நேற்று முன்தினம் விநாயகர் பூஜை, எஜமான சங்கல்பம், மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாகுதி, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு விமான கலசத்தை அடைந்தது. பின்னர் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடந்தது. அதனை தொடர்ந்து சுந்தர மகா கணபதி மூலஸ்தான குடமுழுக்கு மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சாமிசிவானந்தம், கண்டியூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.