ஊட்டியில் காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஊட்டியில் காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.
ஊட்டி
ஊட்டியில் காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.
காசி விஸ்வநாதர் கோவில்
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.இதையொட்டி காலை 7 மணிக்கு கால சாந்தி பூஜை, 11 மணிக்கு உச்சி கால பூஜை, மதியம் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மதியம் 2 மணிக்கு விக்னேஸ்வரா பூஜை, மஹாயாக பூஜை, மாலை 3.30 மணிக்கு மகா பிரதோஷ அபிஷேகம் 5.30 மணிக்கு தீபாராதனை 6 மணிக்கு சுவாமி ஆலயம் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்று சென்றனர்.
வேலிவியூ சிவன் கோவில்
இதேபோல் ஊட்டி -குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலி சிவன் கோவிலிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மஞ்சக் கொம்பை கிராமத்தில் சிவராத்திரி விழா நடைபெற்றது. இங்கு கிராம மக்கள் சார்பில் கோலாகலமாக கரியபெட்டா திருவிழா என்று பாரம்பரியமாக நடந்தது.
விழாவின் தொடக்கமாக சில்லாட்டா என்ற விளையாட்டு ஊர் பெரியவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் பஜனை குழு சார்பில் பஜனை பாடப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர். இதேபோல் மீதேறி ஊரில் நடந்த சிவராத்திரி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி சிவன் மலை
கோத்தகிரி சக்திமலை சிவன் கோவிலில் நேற்று முன் தினம் மாலை மகா சனிப் பிரதோஷ பூஜையும், அதனைத் தொடர்ந்து சிவா ராத்திரி விழாவும் நடைபெற்றது. சிவனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் விடிய விடிய நடைபெற்ற பூஜையில் பக்தர்கள் பங்கேற்று, இரவு முழுவதும் கண்விழித்து ஓம் நமச்சிவாய என்று பாடிக் கொண்டும், எழுதிக் கொண்டும் சிவபெருமானை வழிபட்டனர். இதே போல கோத்தகிரி அருகே உள்ள கெட்சிகெட்டி சிவன் கோவில், திம்பட்டி சிவன் கோவில், மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இரவு 10 மணி அளவில் முதல் கால சிறப்பு பூஜை அதிகாலை வரை நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.