ராமேசுவரம் கோவிலில் மகா சிவராத்திரி விழா தொடங்கியது


தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-12T00:16:03+05:30)

ராமேசுவரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

ராமநாதசுவாமி கோவில்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ந்தேதி வரை 11 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.

விழாவின் முதல் நாளான நேற்று பகல் 11 மணி அளவில் சுவாமி சன்னதி எதிரே நந்தி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி கொடிமரத்திற்கு புனித நீரால் அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது, கொடிமண்டபம் எதிரே பிரியாவிடையுடன் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளினர். சுவாமி-அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

சிவராத்திரி அன்று...

திருவிழாவின் முதல் நாளான நேற்று இரவு சுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரதவீதிகளை வலம் வருகிறார்கள். இரவில் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருள்கிறார்கள். முக்கிய நிகழ்ச்சியாக 8-ம் நாள் விழாவான மாசி மகா சிவராத்திரி அன்று (18-ந் தேதி) நடராஜர் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். இரவு சுவாமி-அம்பாள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் எழுந்தருளி காட்சி தருகின்றனர். அன்று பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடையானது திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தேரோட்டம்

9-ம் நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ம் விழா நாளான மாசி அமாவாசை அன்று சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்கள்.

வருகிற 22-ந் தேதி சண்டிகேசுவரர் வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகி்றது.

ராமேசுவரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா தொடங்கியுள்ளதை தொடர்ந்து தினமும் கோவிலின் தெற்கு திருக்கல்யாண மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

விழா கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் பாஸ்கரன், நேர்முக உதவியாளர் கமலநாதன், பேஸ்கார் முனியசாமி, நகரசபை துணை தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, கவுன்சிலர்கள் முகேஷ் குமார், பிரபு குமார், பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் பவர் நாகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன், இந்து தேசிய கட்சி மாநில செயலாளர் ஹரிதாஸ் சர்மா, மீனவ சங்க தலைவர் தேவதாஸ் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story