தூத்துக்குடி அருகே கோவிலில் 10,008 கிலோ பச்சை மிளகாய் மகா யாகம்


தூத்துக்குடி அருகே கோவிலில் 10,008 கிலோ பச்சை மிளகாய் மகா யாகம்
x

தூத்துக்குடி அருகே ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவிலில் 10,008 கிலோ பச்சை மிளகாய் மகா யாகம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் அய்யனடைப்பில் மகாபிரத்தியங்கிராதேவி-மகா காலபைரவர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஆடிஅமாவாசையை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன்தொல்லைகள், எதிரித் தொல்லைகள் யாவும் முற்றிலுமாக நீங்கிடவும், பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், கல்விவளம் சிறந்திடவும், திருமணவரன், குழந்தை பாக்யம் கிடைத்திடவும், தகுதிக்கு ஏற்ப அரசு வேலை கிடைத்திடவும், உலகை கடந்த காலங்களில் உலுக்கிய கொரோனா போன்ற கொடிய நோய்கள் இல்லாமல் முற்றிலுமாக ஒழிந்திடவும், நன்கு மழை பெய்து விவசாயம் செழிப்பாக நடைபெறவும் வேண்டி 10 ஆயிரத்து 8 கிலோ பச்சை மிளகாய் மகா யாகம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சற்குரு சீனிவாச சித்தர் தலைமை தாங்கி யாகத்தை நடத்தினார். அப்போது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு யாககுண்டத்தில் குவியல், குவியலாக பச்சை மிளகாயை போட்டு வழிபட்டனர். பின்னர் மகா பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு மகா தீபாரதனையும் நடந்தது. அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story