சங்கர ராமேசுவரர் கோவிலில் மகாதேவ அஷ்டமி நிகழ்ச்சி
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் மகாருத்ர வைபவம் என்னும் மகாதேவ அஷ்டமி நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் மார்கழி மாத பிறப்பான நேற்று மகாருத்ர வைபவம் என்னும் மகாதேவ அஷ்டமி நிகழ்ச்சி நடந்தது. மகாதேவ அஷ்டமி நிகழ்ச்சி என்பது சிவபெருமானுக்கும், பைரவருக்கும் உகந்த நாள் ஆகும். உலக நலன் வேண்டியும், மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் இருக்கவும், ஒவ்வொருவரின் விருப்பங்கள் நிறைவேறும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 7 மணிக்கு மேல் சங்கல்பம், விக்னேசுவரபூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, 8 மணிக்கு மகாருத்ர பாராயணம், ருத்ரஹோமம், திரவ்யாகுதி, வஸ்திராகுதி, வஸோத்தாரா, கஜபூஜை, கோபூஜை, 10.25 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை, அதிகார நந்தி தீபாராதனை, மகாபிஷேகம், ருத்ரகலசாபிஷேகம், பஞ்சமுகார்ச்சனை நடந்தது.
மதியம் 12.30 மணிக்கு மகா தீபாராதனை, மகாருத்ர வைபவம் சங்கர ராமேசுவரர் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம்பட்டர் தலைமையில் நடந்தது. இதில் 121 சிவாச்சாரியார்கள் ருத்ர ஜெபத்தை 11 முறை பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
மாலை 6 மணிக்கு திருமுறை பாராயணம் நடந்தது. இரவு 8 மணிக்கு பைரவருக்கு சிறப்பு அலங்காரம், சகஸ்ர நாம அர்ச்சனை, அன்னபாவாடை நைவேத்தியம், மகாதீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.