மகாமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா
வலங்கைமான் மகாமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடந்தது.
வலங்கைமான்:
வலங்கைமானில் மகா மாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா கடந்த 9-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாடைக்காவடி திருவிழா கடந்த 26-ந் தேதி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாடைகாவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு செம்மறி ஆட்டை செடில் மரம் ஏற்றி சுற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று மகா மாரியம்மன் புஷ்ப்ப பல்லக்கில் வீதி உலா நடந்தது. முன்னதாக மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பாலாபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 10 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் மகாமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. பல்லக்கு முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ், ஆய்வாளர் தக்கார் ரமணி, மேலாளர் சீனிவாசன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். இந்த விழாவிற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா தலைமையில் வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.