சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி விழா
மயிலாடுதுறை மாவட்ட பகுதி சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதில் பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட பகுதி சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதில் பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை தாலுகா முட்டம் கிராமத்தில் மகாபலீஸ்வரர் கோவில் உள்ளது. 3 அடி நிலம் கேட்டு விண்ணையும், மண்ணையும் பாதத்தால் அளந்த மகாவிஷ்ணு மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். ஐஸ்வர்யங்களை இழந்த மகாபலி சக்கரவர்த்தி பின்னர் முட்டம் கிராமத்தில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத மகாபலீஸ்வரர் கோவிலில் சிவவழிபாடு செய்து இழந்த செல்வங்களை மீட்டதாக புராண வரலாறு கூறுகிறது.
ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த இக்கோவில் சிதிலமடைந்து தற்போது ஒரு கீற்றுக்கொட்டகையில் வழிபாடு நடைபெற்று வருகிறது. மகாசிவராத்திரியையொட்டி இக்கோவிலில் சாமி, அம்பாளுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் திரவியங்கள் கொண்டு 4 கால சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. விழாவையொட்டி, ஆன்மீக சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.