பழனி அடிவாரத்தில் மயில்காவடி விற்பனை அதிகரிப்பு


பழனி அடிவாரத்தில் மயில்காவடி விற்பனை அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கும்பாபிஷேகம், தைப்பூச திருவிழாவையொட்டி பழனி அடிவாரத்தில் மயில் காவடி விற்பனை அதிகரித்துள்ளது.

திண்டுக்கல்

தைப்பூச திருவிழா

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் வருகிற வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து தைப்பூச திருவிழா 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே அடுத்த மாதம் (பிப்ரவரி) 3, 4-ந்தேதிகளில் நடக்கிறது. பழனி கோவிலில் தொடர்ச்சியாக விழாக்கள் நடைபெறுவதால் நகரமே விழாக்கோலமாக காட்சி தருகிறது.

தைப்பூச திருவிழா நடைபெறும் ஒரு மாதத்துக்கு முன்பே பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பால்காவடி, இளநீர் காவடி, மயில்காவடி எடுத்து பழனிக்கு வருவது வழக்கம். அதன்படி தற்போது ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்கின்றனர். இதில் தைப்பூச திருவிழாயொட்டி வரும் பக்தர்களில் சிலர் பழனிக்கு வந்து மயில்காவடியை வாங்கி கிரிவீதிகளில் சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதற்காக பழனி அடிவார பகுதியில் மயில்காவடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

விற்பனை அதிகம்

இதுகுறித்து அடிவாரத்தில் மயில்காவடி விற்பனை செய்யும் சீனிவாசன் என்பவர் கூறுகையில், தமிழக பக்தர்களை பொறுத்தவரை பெரும்பாலானோர் யாத்திரை தொடங்கும் தங்கள் ஊரில் இருந்தே மயில்காவடி ஏந்தி வருகின்றனர். ஆனால் கேரள, ஆந்திர, கர்நாடக பக்தர்கள் பழனிக்கு வந்து காவடி எடுத்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர். இதில் குழந்தைகள் தூக்கும் வகையில் சிறியதும், பெரியவர்கள் தூக்கும் வகையில் பெரியதுமாக மயில்காவடியை தயாரித்து விற்பனை செய்கிறோம். தைப்பூச திருவிழாவையொட்டி மயில்காவடி விற்பனை அதிகரித்துள்ளது என்றார்.


Next Story