ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பொருட்கள் இருப்பு வைத்தவிவசாயிக்கு ரூ.37 லட்சம் கடனுதவி
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பொருட்கள் இருப்பு வைத்த விவசாயிக்கு ரூ.37 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட குடோன், சேமிப்பு கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆகையால் இந்த குடோனில் நெல் மூட்டைகளை இருப்பு வைத்து, விவசாயிகள் விவசாய பொருட்களுக்கு ஈடாக கடன் பெறலாம். அதன்படி குடோன்களில் பொருட்களை இருப்பு வைக்கும் விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரையிலும், வியாபாரிகளுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலும் விளைபொருட்களுக்கு ஈடாக கடன் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் குடோனில் நெல் மூட்டைகளை இருப்பு வைத்த தூத்துக்குடியை சேர்ந்த ஒரு விவசாயிக்கு வங்கி மூலம் கடனாக ரூ.37 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான கடன் ரசீதை நெல்லை விற்பனை குழு செயலாளர் எழில் விவசாயியிடம் வழங்கினார். அப்போது, விவசாயிகள், வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தண்டாயுதபாணி, ராஜசேகர், சவுத் இந்தியன் வங்கி துணை மேலாளர் விஜய் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.