பராமரிப்பு பணி: சென்னை-அந்தமான் இடையே 16-ந்தேதி வரை விமான சேவைகள் ரத்து


பராமரிப்பு பணி: சென்னை-அந்தமான் இடையே 16-ந்தேதி வரை விமான சேவைகள் ரத்து
x

விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.


சென்னை,

சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்லும் ஏழு விமானங்கள், அந்தமானில் இருந்து சென்னை வரும் ஏழு விமானங்கள், மொத்தம் 14 விமானங்கள் வரும் 16-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதைகள் பராமரிப்பு பணி நடப்பதால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து 4 -ந்தேதி வரை, 15-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரையும், மீண்டும் 29-ந்தேதியில் இருந்து டிசம்பர் 2 -ந்தேதி வரை, மூன்று முறை 12 நாட்கள் அந்தமான் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது 4-வது முறையாக நேற்று முதல் வரும் 16-ந்தேதி வரை 4 நாட்கள் மீண்டும் செய்யப்பட்டுள்ளது.

அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதை பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மீண்டும் விமான சேவைகள் வரும் 17-ந்தேதியில் இருந்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தமான் விமான சேவைகள் கடந்த ஒன்றரை மாதத்தில், 16 நாட்கள் ரத்தாகி உள்ளன. இது பற்றி பயணிகளுக்கு முன்னதாகவே முறையான அறிவிப்பு செய்யப்படாமல், திடீரென இதுபோன்று விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.


Next Story