அழிவின் பிடியில் உள்ள மீன்கள் பராமரிப்பு


அழிவின் பிடியில் உள்ள மீன்கள் பராமரிப்பு
x

கூடலூர் அருகே தாவரவியல் பூங்காவில் அழிவின் பிடியில் உள்ள மீன்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே தாவரவியல் பூங்காவில் அழிவின் பிடியில் உள்ள மீன்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

தாவரவியல் பூங்கா

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இணையாக கூடலூரில் எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் கிடையாது. கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்ற இடமாக இருந்தாலும் முதுமலை, ஊசிமலை காட்சி முனையை தவிர பெரிய அளவில் சுற்றுலா திட்டங்கள் நடைமுறைப்படுத்தவில்லை.

இதனால் கூடலூர்-கேரள எல்லையான நாடுகாணியில் வனத்துறைக்கு சொந்தமான தாவரவியல் பூங்காவில் சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள், வன மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில் அரிய வகை தாவரங்களின் திசு உற்பத்தி மையம், மூலிகை செடிகளின் இல்லம், ஆர்க்கிட்டோரியம், வன விலங்குகளின் உடற்பாகங்கள் கொண்ட கண்காட்சியகம், பெரணி செடி இல்லம் அமைக்கப்பட்டது.

மீன்கள் காட்சியகம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் பார்வையிட வனத்துறை அனுமதித்தது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வாழக்கூடிய மீன்கள், ரசாயன பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் அழிந்து வருகிறது. இதனால் அழிவின் பிடியில் உள்ள மீன்களை சேகரித்து தாவரவியல் பூங்காவில் வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆரல் மீன் காட்சியகத்தை கண்டு ரசிக்கின்றனர். தொடர்ந்து தாவரவியல் பூங்கா வனப்பகுதியில் உள்ள இயற்கை பள்ளத்தாக்கு காட்சிகள் மற்றும் அனைத்து பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தாவரவியல் பூங்காவில் கேரளா ஆறுகளில் வாழக்கூடிய கேரளா ஆப் குயின், கூடலூர் பகுதி ஆறுகளில் காணப்படும் ஆரல், சேல பரவை, உவரி கெண்டை, கவுளி (நீலகிரி மாவட்டம் மட்டும்), டைகர் மீன், சல்லி பொடி, பச்சமுண்ட கன்னி புள் இட் ஆப் உள்பட பல ரக மீன்கள் அழிவின் பிடியில் உள்ளது.

விழிப்புணர்வு

இதை தன்னார்வலர்கள் உதவியுடன் பிடித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பராமரிக்கப்படுகிறது. இது தவிர சிறந்த சுற்றுலா தலமாகவும் மாறி வருகிறது. மேலும் பூங்காவில் இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் தங்கி கொள்ளலாம். கடந்த மே முதல் நடப்பு மாதம் இதுவரை 8 ஆயிரம் பயணிகள் தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்து உள்ளனர் என்றனர்.


Next Story