குமரியில் 100 அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் தீவிரம்
குமரியில் 100 அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் தீவிரம்
ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் ஒரு புத்தகம் போன்றது. அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தை அலங்கரிப்பது பள்ளி பருவம் என்றால் அது மிகை அல்ல. சிறு பிள்ளையாய் பெற்றோரின் கை பிடித்து பள்ளிக்குள் அடியெடுத்து வைக்கும் ஒருவன் ஆசிரியர்களுடன் கைகோர்த்து அற–வால் முழுமையடைந்த மனிதனாய் பள்ளியில் இருந்து வெளியேறுகிறான். அத்தகைய சிறப்பு வாய்ந்த பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் தன்மை பற்றி பல்வேறு கேள்விகள் எழுகிறது.
ஏனெனில் தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளி கட்டிடங்கள் பழமையானதாக உள்ளன. போதுமான இடவசதி இல்லை. வாடகை கட்டிடங்களில் செயல்படும் பள்ளிகளையும் பார்க்க முடிகிறது. போதிய பராமரிப்பு இல்லாததால் பள்ளிகளில் மேற்கூரை பெயர்ந்து விழுவது, காம்பவுண்டு சுவர் இடிந்து விழவது என்று பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தில் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்களின் உயிரை காவு வாங்கியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமைச்சர் உத்தரவு
இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அதாவது, சேதமடைந்த பள்ளிகளை கணக்கெடுக்க உத்தரவிட்டதோடு அதனை உடனடியாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்தார். அதே சமயத்தில் பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை உடனடியாக இடித்து அகற்றவும் நோட்டீஸ் கொடுக்கும்படி கூறினார். பின்னர் அதற்கென குழுக்கள் அமைத்து அனைத்து அரசு பள்ளிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
சேதம் அடைந்த கட்டிடங்கள் கண்டறிந்து இடித்து அகற்றப்பட்டன. மேலும் பழமை வாய்ந்த கட்டிடங்களை பராமரிக்க உத்தரவிடப்பட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 100 அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
100 பள்ளிகளில் பராமரிப்பு
இது–பற்றி கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் 516 அரசு பள்ளிகள் உள்ளன. அதாவது 286 தொடக்க பள்ளிகளும், 95 நடுநிலை பள்ளிகளும், 76 உயர்நிலை பள்ளிகளும், 59 மேல்நிலை பள்ளிகளும் என மொத்தம் 516 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நெல்லை சம்பவத்துக்கு பிறகு அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டிடங்களின் நிலை குறித்து பள்ளியில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பல்வேறு பள்ளிகளில் கட்டிடங்கள் மற்றும் ஷெட்கள் அகற்றப்பட வேண்டிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 100-க்கும் அதிகமான கட்டிடங்கள் மற்றும் ஷெட்கள் இடித்து அகற்றப்பட்டன.
மேலும் சுமார் 100 பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டி இருந்தது. அதாவது மேற்கூரையில் உடைப்பு, அலங்கார தரைகள் சேதம், சுவர்களில் கீறல், ஜன்னல் மற்றும் கதவுகள் பழுது உள்ளிட்டவற்றை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
அகஸ்தீஸ்வரம் அரசு பள்ளி
குமரி மாவட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளில் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியும் ஒன்று அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி 1948-ல் தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை 62 மாணவர்கள், 78 மாணவிகள் என மொத்தம் 140 பேர் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், 3 இடைநிலை ஆசிரியர்கள் என 4 பேர் பணியாற்றுகிறார்கள். பழமை வாய்ந்த இந்த பள்ளி ஓட்டு கட்டிடம், ஒரு ஆஸ்பெட்டாஸ் கட்டிடம், 2 காங்கிரீட் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் கடந்த 2014-15-ம் நிதியாண்டில் பராமரிக்கப்பட்டது.
சேதமடைந்த கட்டிடங்கள்
தற்போது அங்குள்ள 2 கட்டிடங்களில் உள்ள சிமெண்டால் வார்க்கப்பட்ட ஜன்னல்களில் வெடிப்பு ஏற்பட்டும், இரும்பு தகடுகளால் செய்யப்பட்ட ஜன்னல்கள் துருப்பிடித்தும் சேதமடைந்து காட்சி அளித்தது. கட்டிடத்தின் உள்ளே மேற்கூரையின் காங்கிரீட்டுகள் மற்றும் கட்டிடத்தின் வெளியே உள்ள பகுதி எப்போது வேண்டுமானாலும் பெயர்ந்து விழலாம் என்ற நிலையில் இருந்தது. எனவே மாணவ, மாணவிகள் அங்கு அச்சத்துடன் படித்து வந்தனர். ஆசிரியர்களும் குழந்தைகள் மீது கட்டிடத்தின் மேற்கூரை சிலாப்புகள் பெயர்ந்து விழுந்து விடுமோ என பதற்றத்துடனேயே பணியாற்றி உள்ளனர்.
இந்தநிலையில் தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.1.44 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
இதையடுத்து பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்–கள் அச்சத்தில் இருந்து மீண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் விரைவில் இந்த பணியை முடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
மழைநீர் தேங்காமல் நடவடிக்கை
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெஸ்லி கூறியதாவது:-
நான் இந்த பள்ளியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இங்கு தற்போது 140 மாணவர்கள் படித்து வருகின்றனர். கொரோனா கால கட்டத்தில் ஆன்லைன் கல்வி என்பதால் தனியார் பள்ளியில் படித்த குழந்தைகளும் இங்கு வந்து சேர்ந்தனர். அப்போது 180 பேர் படித்தனர். இதில் 40 மாணவர்கள் மீண்டும் தனியார் பள்ளிக்கே சென்று விட்டனர். இந்த பள்ளியிலும் தனியார் பள்ளிகள் போல் ஆங்கில வழி கல்வியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள 2 வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து இருந்தது.
இதை சரி செய்ய பலமுறை சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை மனு கொடுத்திருந்தோம். ஆனால் தற்போது தான் பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு மழை நேரங்களில் மழைநீர் தேங்கி குழந்தைகள் பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது உண்டு. கடந்த கன மழை காலத்தில் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி கழிப்பறைகள் நிரம்பி விட்டது. அப்போது பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் சேர்ந்து தற்காலிகமாக மணல் போட்டு நிரப்பினர். எனவே மழை நேரங்களில் மழைநீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வு ஏற்பட அரசு தான் உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை ஐடா ஜாய் கூறியதாவது:-
நான் இந்த பள்ளியில் சுமார் 15 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். இங்கிருக்கும் பழமையான ஓட்டு கட்டிடத்தை தவிர மற்ற மூன்று கட்டிடங்களும் அதற்கு பின்பு கட்டப்பட்டது.
இதில் சேதமடைந்த கட்டிடங்களை பரமாரிக்க அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது அதன் பேரில் தற்போது பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்கள் மகிழ்ச்சி
5-ம் வகுப்பு மாணவி ஜே.அபிஷா கூறியதாவது:-
நான் இங்கு 4-ம் வகுப்பு முதல் படித்து வருகிறேன். எங்களது வகுப்பறை கட்டிடத்தின் ஜன்னலை சுற்றி சுவரில் வெடிப்பு ஏற்பட்டு இரும்புதகடால் செய்யப்பட்ட ஜன்னல் கழன்று திறக்க முடியாமல் இருந்தது. மேலும் மேற்கூரையிலும் வெடிப்பு ஏற்பட்டு கீழே விழக்கூடிய நிலையில் இருந்ததால், அது எங்கள் மீது விழுந்துவிடுமோ என்ற பயம் இருந்தது. தற்போது அது சரிசெய்யப்பட்டு வருவதால் அச்சம் தீர்ந்துள்ளது என்றார்.
5-ம் வகுப்பு மாணவர்கள் பி.எஸ்.ஹரீஷ், எம்.அனீஷ் கூறியதாவது:-
நாங்கள் இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் படித்து வருகிறோம். எங்களது வகுப்பறையின் பின்பக்கம் உள்ள சிலாப்பில் வெடிப்பு ஏற்–பட்டு எப்–போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருந்தது. அது எங்கள் மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அதன் அருகில் உள்ள கழிவறைக்கு செல்ல பயமாக இருந்தது. தற்போது அது சரிசெய்யப்பட்டு வருவதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் நாங்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் இல்லாதது வருத்தமாக உள்ளது. இதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு மழைக்கு பாதிக்கப்பட்ட பள்ளிகளை கண்டறிந்து நடவடிக்கை
குமரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த பலத்த மழைக்கு பள்ளிக்கூட வளாகத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்தது. அந்த வகையில் 51 அரசு பள்ளிகள் மிகவும் பாதிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் செல்ல முடியாத நிலை இருந்தது.
இதில் சாலையை தண்ணீர் மூழ்கடித்ததால் பள்ளிக்கு செல்ல வழி இல்லாத நிலையும் இருந்தது. அந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் ஏற்கனவே வெள்ளம் சூழ்ந்த பள்ளிகளை கணக்கிட்டு அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்–துள்–ள–னர்.
எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் பள்ளிக்கூடங்களை கண்காணித்து பருவமழையின் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நிகழ்ந்து விடாமல் தடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.