மதுரை யார்டு பகுதியில் பராமரிப்பு பணி:சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் ரத்து


மதுரை யார்டு பகுதியில் பராமரிப்பு பணி:சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் ரத்து
x

மதுரை யார்டு பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

சேலம்


சூரமங்கலம்,

பராமரிப்பு பணி


மதுரை-திருமங்கலம் இடையே இருவழிப்பாதை அமைப்பதையொட்டி மதுரை ரெயில் நிலைய யார்டு பகுதியில் பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி சேலம், கரூர் வழியாக செல்லும் சென்னை சென்ட்ரல்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-20601) அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் மதுரை-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-20602) நாளை (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 26, 28 ஆகிய தேதிகளிலும், அடுத்த மாதம் (மார்ச்) 2 மற்றும் 5 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் வழியாக செல்லும் பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-17235) அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-17236) மார்ச் மாதம் 2-ந் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து

தாதர்-நெல்லை ரெயில் (வண்டி எண்-11021) வருகிற 28 மற்றும் மார்ச் 1-ந் தேதி சேலம்-நெல்லை வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் தாதர் முதல் சேலம் வரை மட்டுமே இயக்கப்படும். சேலம் முதல் நெல்லை வரை இயக்கப்படாது.

இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் நெல்லை-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-11022) மார்ச் மாதம் 2,3 ஆகிய தேதிகளில் நெல்லை முதல் சேலம் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் சேலம் முதல் தாதர் வரை இயக்கப்படும்.

மாற்று பாதையில் இயக்கம்

மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16339) வருகிற 28-ந் தேதி மற்றும் மார்ச் 1-ந் தேதி கரூர், மதுரை, நெல்லை வழியாக செல்லாமல் மாற்று பாதையான ஈரோடு, போத்தனூர், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் சென்றடையும்.

நெல்லை - தாதர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22630) வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி மதுரை, கரூர், ஈரோடு, கோவை வழியாக செல்லாமல் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், சோரனூர் சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story