காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் அமெரிக்க போர்க்கப்பலின் பராமரிப்பு பணி நிறைவு


காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் அமெரிக்க போர்க்கப்பலின் பராமரிப்பு பணி நிறைவு
x

காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் நடந்து வந்த அமெரிக்க போர்க்கப்பலின் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில், 'எல் அண்ட் டி' நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் செயல்பட்டு வருகிறது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், இந்த கப்பல் கட்டும் தளத்தில் இருந்து இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய ரோந்து கப்பல்கள் தயாரித்து வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று நவீன காலத்துக்கு ஏற்ப கப்பல்கள் பழுது நீக்கப்பட்டு, புனரமைப்பு செய்தும் கொடுக்கப்பட்டு வருகின்றது.

அமெரிக்க போர்க்கப்பல் வருகை

இந்தநிலையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க கடற்படையை சேர்ந்த 'யூ.எஸ்.என்.எஸ். சார்லஸ் டிரியூ' என்ற போர்க்கப்பல் பழுது மற்றும் பராமரிப்பு சேவைக்காக, முதல் முறையாக இந்தியாவுக்கு கடந்த 7-ந் தேதி வந்துள்ளது.

காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பலில் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகள் நடந்து வந்தன. வழக்கமாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு, சிப்பந்திகள் வசிக்கும் அமைப்புகள் மற்றும் உபகரணங்கள் மீதான பழுதுபார்ப்பு பணிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டன.

பராமரிப்பு பணி நிறைவு

11 நாட்கள் நடந்து வந்த பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இதுகுறித்து பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமார் கூறுகையில், ''அமெரிக்க போர்க்கப்பலுக்கு பழுதுபார்ப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கியதன் மூலம், இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவு வலுவடைந்து உள்ளது. இதன் மூலம் இந்தோ-பசிபிக் திட்டத்தின் கீழ் தெற்கு ஆசியாவில் நல்லிணக்கம் மேம்படும்'' என்றார்.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணைத்தூதர் ஜூவித் ரேவின் கூறும்போது, ''காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் அமெரிக்க போர்க்கப்பலான 'சார்லஸ் டிரியூ' பழுது பார்க்கப்பட்டது. இது ஒரு குறிப்பிடத்தகுந்த மைல்கல். இது இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதின் அடையாளமும் கூட'' என்று குறிப்பிட்டார்.

தற்போது பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் 'சார்லஸ்' போர்க்கப்பல் விரைவில் அமெரிக்கா புறப்பட இருக்கிறது.


Next Story