ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள்


ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள்
x

தஞ்சை ரெயில் நிலையத்தில் ரூ.23 கோடியில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. இதில் நடைமேடைகளில் நிழற்கூரை அமைக்கும் பணிகள், கட்டிடங்களில் மேற்கூரை அகற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்

தஞ்சை ரெயில் நிலையத்தில் ரூ.23 கோடியில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. இதில் நடைமேடைகளில் நிழற்கூரை அமைக்கும் பணிகள், கட்டிடங்களில் மேற்கூரை அகற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தஞ்சை ரெயில் நிலையம்

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் அதிக வருமானம் வரும் ரெயில் நிலையங்களுள் திருச்சிக்கு அடுத்தபடியாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கிருந்து பயணிகள் அதிக அளவில் வெளியூர்களுக்கும், வெளியூர்களில் இருந்து தஞ்சைக்கும் வந்து செல்கிறார்கள். காரணம் தஞ்சை வரலாற்று சிறப்பு மிக்க நகரமாக இருப்பதோடு, சுற்றுலா தலமாக விளங்கி வருவதாலும் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

திருச்சிக்கு அடுத்தபடியாக தஞ்சை ரெயில் நிலையத்தில் அதிக வருமானம் வந்தாலும் ரெயில் நிலையத்தில் இன்னும் போதுமான வசதிகள் இல்லை. தஞ்சை ரெயில் நிலையத்தில் 2022-2023-ம் ஆண்டில் மட்டும் ரூ.43.16 கோடி டிக்கெட் மூலம் வருவாய் கிடைத்துள்ளது. 36 லட்சம் பயணிகள் வந்து சென்றுள்ளனர்.

அம்ரித் பாரத் திட்டம்

இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் அம்ரித்பாரத் திட்டத்தின் கீழ் 508 ரெயில் நிலையங்களை மேம்படுத்த உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை பிரதமர் நரேந்திரமோடி கடந்த 6-ந்தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவுவாயில்கள் சீரமைப்பு, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள், மல்டி லெவல் பார்க்கிங் வசதி, கண்காணிப்பு கேமரா, வை பை வசதி, இயற்கைக் காட்சிகள், தோட்டம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும் ரெயில் நிலையங்களுள் தஞ்சை ரெயில் நிலையமும் அடங்கும். தஞ்சை ரெயில் நிலையத்தில் மட்டும் ரூ.23 கோடி செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான பணிகள் தற்போது தொடங்கி நடந்து வருகிறது.

இதற்காக முதல் கட்டமாக ரூ.15 கோடியே 29 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 2-வது நடைமேடையில் நிழற்கூரை, கழிவறை வசதி, பயணிகளுக்கான காத்திருப்பு அறை உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது. முகப்பு பகுதியில் செடிகளுடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும் கார்டன் அமைக்கப்படுகிறது.

தண்டவாள பகுதியில் பராமரிப்பு பணி

தற்போது 2-வது நடைமேடையில் உள்ள தண்டவாளம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. தஞ்சை ரெயில் நிலையத்தில் மொத்தம் 5 நடைமேடைகள் உள்ளன. இதில் 2-வது நடைமேடை பகுதியில் தண்டவாள பகுதியில் உள்ள சிலீப்பர் கட்டைகள், அதனை தண்டவாளத்துடன் இணைத்து பொருத்தப்பட்டுள்ள கம்பிகள் போற்வற்றை அகற்றி விட்டு புனரமைக்கும் பணிகள்நடந்து வருகிறது.

இதனால் 2-வது நடைமேடை பகுதியில் ரெயில்கள் 90 நாட்கள் வரை இயக்கப்படாது என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவி்க்கப்பட்டது. ரெயில்கள் சுமூகமாக செல்லும் வகையிலும், ஏற்கனவே போடப்பட்ட சிலீப்பர் கட்டைகள் மற்றும் இரும்புக்கம்பிகள் மண்ணோடு சேர்ந்து இறுக்கமாக உள்ளதால் அதனை புனரமைக்கும் வகையிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் 2-வது நடைமேடையை தவிர்த்து இதர நடைமேடைகளில் ரெயில்கள் அதாவது 1, 3, 4, 5 ஆகிய நடைமேடைகளில் நின்று சென்று வருகின்றன.


Next Story