வடமதுரை அருகே 15 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் கருகி நாசம்


வடமதுரை அருகே 15 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் கருகி நாசம்
x

வடமதுரை அருகே 15 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் கருகி நாசமானது.

திண்டுக்கல்

வடமதுரை அருகே பிலாத்து பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 65). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார். பயிர் வளர்ந்த 25 நாட்களுக்கு பிறகு வடமதுரையில் உள்ள ஒரு உரக்கடையில் இருந்து தனியார் நிறுவனத்தின் களைக்கொல்லி மருந்து ஒன்றை வாங்கி பயிர்களுக்கு அடித்துள்ளார். களைக்கொல்லி மருந்து அடித்தது முதல் பயிர்கள் வளராமல், அவற்றின் வளர்ச்சி குன்றி கருகின.

ஆனால் வேறு களைக்கொல்லி மருந்து அடித்த மக்காச்சோள பயிர்கள், சுமார் 5 அடி உயரத்திற்கு வளர்ந்து நிற்கின்றன. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (60) என்ற விவசாயியும், அந்த களைக்கொல்லி மருந்தை வாங்கி அடித்ததால் 5 ஏக்கர் அளவில் மக்காச்சோள பயிர்கள் கருகின. மேலும் அப்பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 15 ஏக்கர் நிலத்தில் பயிரிட்ட மக்காச்சோளம் பயிர்களும், அந்த குறிப்பிட்ட களைக்கொல்லி மருந்தால் கருகியுள்ளன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் களைக்கொல்லி மருந்து நிறுவனத்தினரிடமும், வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே கருகிய பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், பயிர்கள் கருக காரணமான களைக்கொல்லி மருந்து நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story