சட்டமன்ற உறுப்பினர்களின் முக்கிய கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்படும்; சபாநாயகர் அப்பாவு பேச்சு
சட்டமன்ற உறுப்பினர்களின் முக்கிய கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனுக்கள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பேசினார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் முக்கிய கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனுக்கள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பேசினார்.
ஆலோசனை கூட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் "உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்" திட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ.க்கள் மூலம் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு சபாநாயகர் அப்பாவு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப் (பாளையங்கோட்டை), ரூபி மனோகரன் (நாங்குநேரி), நயினார் நாகேந்திரன் (நெல்லை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அப்பாவு பேசியதாவது:-
கோரிக்கைகள்
உங்கள் தொகுதியில் முதல்- அமைச்சர் திட்டத்தின் மூலம் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள முக்கியமாக செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், மக்களின் கோரிக்கைகள் குறித்து ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கி உள்ளனர்.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, நெல்லை, அம்பை ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் கூறப்பட்டுள்ள திட்டப்பணிகள் செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள், அதற்கான வரைவு திட்டங்கள் பயன்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
விரைவில் நிறைவேற்றப்படும்
இந்த கூட்டத்தில் குடிநீர் மற்றும் நீர் ஆதாரத்தை மேம்படுத்தக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகள், வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்கு உரிய பணிகள், இணைப்பு பாலங்கள் மற்றும் சாலைகள், மருத்துவ வசதிகள், பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. போன்ற புதிய கல்வி நிறுவனங்கள் அல்லது தற்போது உள்ள கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் கட்டமைப்பு பணிகள், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய வசதிகள், நவீன நூலகம், நவீன வசதியுடன் கூடிய பஸ்நிலையங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற முக்கியமான தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள கோரிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் முக்கிய கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்படும். அந்த கோரிக்கைகள் முதல்-அமைச்சர் உத்தரவின்படி விரைவில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பழனி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.