'நீட்' தேர்வு பயிற்சி மையத்தை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்-கலெக்டர் அறிவுரை
அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு பயிற்சி மையத்தை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கூறினார்.
காரைக்குடி
அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு பயிற்சி மையத்தை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கூறினார்.
இலவச பயிற்சி மையம்
காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள கிராமிய பயிற்சி மையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தினை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை எதிர்கொள்ளும் விதமாக அமராவதிபுதூர் கிராமிய பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு 45 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த உயர் கல்விக்கு 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு அதிக அளவில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
பதற்றம் ஏற்படாது
இந்த பயிற்சி மையத்தில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு தங்குமிடம், உணவு, பயிற்சி, படிப்பதற்கான புத்தகங்கள், தேர்வுக்கு தயாராவதற்கு தேவையான மாதிரி வினா-விடைத்தாள்கள் போன்றவை இலவசமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் தன்னார்வத்துடன் பயிற்சி அளிக்க தயாராக உள்ள சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. பயிற்சி தினந்தோறும் காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறுகிறது. தினந்தோறும் வழங்கப்படும் பயிற்சி குறித்த தேர்வும் நடத்தப்படும். இதன்மூலம் நுழைவுத்தேர்வு குறித்து மாணவ-மாணவியருக்கு உள்ள பயம், பதற்றம் போன்றவற்றை தணிப்பதற்காக இத் தேர்வு நடத்தப்படுகிறது
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுற்ற பின்பு அவர்களுக்கு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வு பெற்ற 200 மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. மாணவ-மாணவிகள் இப் பயிற்சி வகுப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் கிராமிய பயிற்சி மைய இயக்குனர் ஆறுமுகம், கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் தாமோதரன், முதன்மை மண்டல அலுவலர் மலர்விழி, உதவி திட்ட அலுவலர் பீட்டர்லெமாயு உள்பட பலர் கலந்து கொண்டனர்.