மாணவர் சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டும்: தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை வகுப்புகள்-ஆசிரியர்கள், ஆலோசகர்கள் கருத்து


தினத்தந்தி 22 Dec 2022 4:04 AM IST (Updated: 22 Dec 2022 4:05 AM IST)
t-max-icont-min-icon

மாணவர் சமூகத்தில் தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை வகுப்புகள் அவசியம் என்று ஆசிரியர்கள், ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

சேலம்

தன் மீதும், சக மனிதர்கள் மீதும், சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் இருக்கும் நம்பிக்கையை முற்றிலும் இழக்கும் ஒருவர்தான், தற்கொலை முடிவை எடுக்கிறார். அந்தநேரத்தில் சக மனிதர்களும், சுற்றியுள்ள சமூகமும் சம்பந்தப்பட்ட நபருக்கு செவிசாய்க்கும் பட்சத்தில், உடனடியாக அவர் அந்த முடிவில் இருந்து மனம் மாறிவிடுகிறார். ஆனால் தற்போது நாம் வாழும் சமூகத்தில் அதற்கான வாய்ப்பு தாமதம் ஆவதாலே தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து விடுவதாக மனநல ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவர், அவரது நடவடிக்கைகள் மூலம் பல்வேறு வகைகளில் சுற்றியுள்ளவர்களிடம் அதை வெளிப்படுத்துவார். அதை நண்பர்களோ, உறவினர்களோ உடனே உணர்ந்து கொண்டால் அவர்களின் எண்ணங்களை மாற்றி நல்வழிப் படுத்திவிட முடியும். இன்றைய நாகரிக உலகில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவும் தற்கொலை சம்பவங்கள் அதிகரிப்புக்கு, அடித்தளமாக அமைந்து விடுகிறது.

காரணங்கள்

கடன் தொல்லை, வேலை கிடைக்கவில்லை, குடும்ப பிரச்சினை, திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் ஏமாற்றம், உடல்நிலை சரியில்லை, காதல் தோல்வி, போதை பழக்கத்துக்கு அடிமை, படிப்பில் சாதிக்க முடியாத நிலை, தேர்வுகளில் தோல்வி போன்றவைகளே பரெும்பாலான தற்கொலைகளுக்கு காரணங்களாக அமைகின்றன. ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பவர்களின் தற்கொலைகளும் தற்போது புதிதாக இணைந்து இருக்கின்றன. தற்கொலை செய்துகொள்வதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதும் வருத்தம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

தற்கொலை செய்துகொள்ளும் நபர்கள் தங்களை மட்டும் காயப்படுத்திக்கொள்வதில்லை. மாறாக, அவர்களைச் சார்ந்த குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் ஏற்படும் துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தரெிவிக்கிறது.

புள்ளி விவரங்கள்

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை காணமுடிகிறது. கடந்த 2020-ம் ஆண்டில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2021-ம் ஆண்டு அது ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 33 ஆக உயர்ந்து இருப்பதுடன், அதில் 18 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் புள்ளி விவரம் காட்டுகிறது.

தமிழ்நாடு 2-வது இடம்

இந்தியாவில் ஒட்டுமொத்த தற்கொலை சம்பவங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2021-ம் ஆண்டில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அவர்களில் 940 பேர் மாணவர் பருவத்தில் உள்ளவர்கள் என்பது வேதனையிலும் வேதனை.

இது ஒரு புறம் இருக்க 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது, மேலும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அதில், 10 ஆயிரத்து 692 பேர் தற்கொலை செய்து கொண்டதில், 525 பேர் மாணவச் செல்வங்களாக இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது மேலும் மனவலியாக இருக்கிறது.

மனநல ஆலோசனை

மாணவச் சமுதாயத்தின் இதுபோன்ற தற்கொலை எண்ணங்களை தடுக்க என்னதான் செய்ய வேண்டும்? என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது. அந்த கேள்விக்கு பதிலாக, மனநல ஆலோசனைகள் வழங்குவதன் மூலம், அவர்களைத் தற்கொலை முடிவுகளில் இருந்து விடுவிக்க முடியும் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.

பள்ளிகளில் மனநல ஆலோசனை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டாலும், அது பெயர் அளவிலேயே இருக்கிறது. அதனை மீண்டும் முறைப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது எழுந்து இருக்கிறது.

இதுபற்றி ஆசிரியர்கள், பெற்றோர், மனநல ஆலோசகரிடம் கேட்டபோது அவர்கள் தரெிவித்த கருத்துகள் வருமாறு:-

மனநல வகுப்புகள்

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனநலத்துறை பேராசிரியர் முகமது லியாஸ் கூறும் போது இன்றைய அறிவியல் உலகில் மாணவ, மாணவிகள் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதற்கு தீர்வு காண சீரான உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றின் அவசியம் பற்றி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும். ஒவ்வொரு மாணவர்களிடமும் ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் கலந்துரையாட வேண்டும். அவ்வப்போது மனநல வகுப்புகள் நடத்த வேண்டும்.

வகுப்பறையில் மாணவர்கள் கூறும் கருத்துக்களை ஆசிரியர்கள் கேட்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர் கழகத்தை வலுப்படுத்தி அவ்வப்போது மாணவர்கள் வகுப்பறையில் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து பெற்றோரிடம் எடுத்துக்கூற வேண்டும். படிப்பு மட்டுமின்றி, விளையாட்டு, கலை போன்ற துறைகளில் உள்ள ஆர்வத்தை கண்டறிந்து அதை ஊக்கப்படுத்தும் போது மாணவர்களின் மனநலன் பாதுகாக்கலாம். தேர்வில் தோல்வி என்பது வாழ்வின் முடிவு அல்ல. பிற திறமைகள் மூலம் சாதனை படைக்காலம் என்பதை மாணவர்களுக்கு அவ்வப்போது ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினால் அவர்கள் தவறான முடிவுக்கு செல்ல மாட்டார்கள்.

மாணவர்களின் மனநலத்தை காக்கவும், தற்கொலை எண்ணங்களை தவிர்க்கவும், தமிழக அரசு மனநல ஆலோசனைகளை பல்வேறு வழிகளில் வழங்கி வருகிறது. அதன்படி 14416 என்ற அவசர கால உதவி எண்ணை செயல்படுத்தி வருகிறது. எனவே இது போன்ற உதவிகளை பயன்படுத்திக்கொண்டால் வரும் காலங்களில் மாணவ சமுதாயத்தில் மனநல பாதிப்புகள் குறைந்து வலிமையான இந்தியாவை படைக்கலாம்.

மனோதத்துவ நிபுணர்கள்

நிலவாரப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் உமாகாந்தன்:- பள்ளிகளில் மனநல வகுப்புகள் தற்போதும் நடத்தப்பட்டு வருகிறது. அதை நடத்துபவர்கள் ஆசிரியர்கள் தான். ஆசிரியர் பட்டப்படிப்பு படிக்கும் போது அதில் மனநலம் பற்றிய ஒரு பாடம் இடம் பெறுகிறது. அந்த பாடத்தில் படித்தவைகளை வைத்து மாணவர்களுக்கு மனநல வகுப்புகள் நடத்தப்படுகிறது. இது போதாது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் மனோதத்துவ நிபுணர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு மனநல வகுப்புகள் நடத்த வேண்டும். வாரம் ஒரு முறை அல்லது 2 முறை ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாகவும், குழுவாகவும் மனநல பாடம் நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தும் போது ஒரு மாணவனுக்கு இந்த குறைபாடு உள்ளது என்பது மனநல நிபுணர்களுக்கு தரெியும். அப்போது மாணவனுக்கு உள்ள குறைபாடு பற்றி, அவர்கள் ஆசிரியர்களிடம் கூறும் போது ஆசிரியர்கள் அதற்கு தகுந்தாற்போல் மாணவனுக்கு அறிவுரை வழங்க வசதியாக இருக்கும்.

நவீன கால மாணவர்கள் வீட்டில் உள்ள பிரச்சினைகளை ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை. காரணம் அவ்வாறு வீட்டு சூழலை ஆசிரியர்களிடம் தன்னை தாழ்மையாக நினைத்து விடுவார்கள் என்ற கவுரவ பிரச்சினையாக நினைக்கிறார்கள். இதையும் மீறி மாணவர்களின் குடும்ப சூழல் பற்றி தெரிந்து கொண்டால், ஆசிரியர்களிடம் நரெுங்குவதை மாணவர்கள் தவிக்கின்றனர். மாணவனின் முன்னேற்றத்திற்காகத்தான் ஆசிரியர்கள் உள்ளோம். கொரோனா தொற்று பரவலின் போது மாணவ, மாணவிகள் வீட்டிலேயே அடைபட்டு கிடந்தார்கள். அப்போது அவர்கள் யாரிடமும் மனம் விட்டு பேசாமல் இருந்தனர். இதனால் அவர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாகிவிட்டது. குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் 4-ம் வகுப்பு படித்த மாணவன், கொரோனாவுக்கு பிறகு தற்போது 6-ம் வகுப்பு வந்து சேரும் அவனுக்கு 4-ம் வகுப்பு படித்த அறிவுதான் உள்ளது. 6-ம் வகுப்பு படிக்கும் அளவில் அவனுக்கு அறிவு வளரவில்லை. எனவே மனோதத்துவ நிபுணர்கள், உலவியல் படித்தவர்கள் மூலம் அந்தந்த பள்ளியில் வாரம் ஒரு முறை அல்லது 2 முறை மாணவர்களுக்கு மன நலவகுப்புகள் நடத்தினால் தற்கொலை எண்ணத்தை குறைக்கலாம். நல்ல மாணவர்களை உருவாக்க முடியும் என்று கூறினார்.

தவறான எண்ணங்கள்

பெண் வக்கீல் காந்திமதி:- தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். இதனால் தினமும் பல மணி நேரம் குழந்தைகள் பெற்றோரை பிரிந்து இருக்கும் நிலை ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு பேச்சு துணைக்கு ஆள் இருப்பது இல்லை. அவர்களுக்கு உள்ள சில சந்தேகங்களுக்கு கூட தீர்வு சொல்ல ஆள் இல்லை. அதனால் அவர்கள் அதிக நேரம் செல்போன் உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். பல மாணவர்கள் இதனால் மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர்.

இதனால் சின்ன பிரச்சினைகளை கூட தாங்க முடியாத சில மாணவர்கள் வாழ்க்கையின் இறுதி கட்டம் பற்றி யோசிக்கும் நிலைக்கு செல்கின்றனர். இந்த நிலையை மாற்ற தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு மனநல வகுப்புகள் நடத்த வேண்டும். மேலும் மாணவர்களின் தவறான எண்ணங்களை திசை திருப்ப அவர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்த வேண்டும். மேலும் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஒன்று சேர்ந்து கலந்துரையாடல் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story