மாலை தாண்டும் திருவிழா
செந்துறை அருகே மாடுகள் மாலை தாண்டும் விழா நடந்தது.
செந்துறை அருகே மல்லநாயக்கன்பட்டியில் பிரசித்தி பெற்ற ஜக்காலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 22 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 17-ந்நேதி சாமி சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவில் முதல் நாள் தேவராட்டமும், 2-ம் நாள் ஜக்காலம்மனுக்கு கம்பு கொழுக்கட்டை படையல் போட்டு வழிபாடும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான மாடுகள் மாலை தாண்டும் திருவிழா நேற்று நடந்தது. இதில் 18 பட்டிக்கு கட்டுப்பட்ட 96 கிராமங்களை சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் தங்கள் பகுதியில் வளர்க்கும் சாமி மாடுகளுடன் கலந்து கொண்டனர்.
முக்கிய நிகழ்ச்சியான அந்த சமுதாய மக்கள் சடங்குகள் செய்து 14 மந்தைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சாமி மாடுகளை அழைத்து வந்து கோவில் முன் பூஜைகள் செய்யப்பட்டது. சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கருத்தநாயக்கர் மந்தை எல்லைசாமி கோவிலுக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு எல்லைசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மாடுகளுக்கு புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர் தரையில் போடப்பட்டிருந்த வெள்ளை துணியை மாடுகளை தாண்ட வைத்து அதனுடன் சேர்ந்து ஓடினர்.
விழாவில் ஓடி வந்த மாட்டின் மீது சமூக வழக்கப்படி கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடி தூவப்பட்டு, எலுமிச்சைப்பழம் வெற்றி பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் கன்னி பெண்களும் எல்லை கோட்டில் இருந்து தேவராட்டத்துடன் ஜக்காலம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அனைத்து மந்தையர்களையும் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ஜக்காலம்மனுக்கு பொங்கல் வைத்தல், அபிஷேக ஆராதனையுடன் திருவிழா முடிவடைந்தது.