மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடைகொண்ட ராட்சத கொழுக்கட்டை இன்று படைக்கப்படுகிறது.
மலைக்கோட்டை, ஆக.31-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடைகொண்ட ராட்சத கொழுக்கட்டை இன்று படைக்கப்படுகிறது.
மலைக்கோட்டை கோவில்
தென் கைலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்னாவளி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவளது தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம் ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமான சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
இந்த மலைக்கோட்டை கோவிலில் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார், மலையின் நடுப்பகுதியில் தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா
இந்த மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு கஜ பூஜையுடன் தொடங்குகிறது.
தொடர்ந்து 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தாயுமான சுவாமி கோவிலில் தயாரிக்கப்பட்ட 150 கிலோ எடை கொண்ட ராட்சத கொழுக்கட்டையை தொட்டில் கட்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு தலா 75 கிலோவில் படையலிட்டு நைவேத்தியம் செய்யப்பட உள்ளது. இந்த விழாவிற்காக 150 கிலோவில் மிகப்பிரமாண்டமான கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நேற்று காலை தொடங்கியது.
ராட்சத கொழுக்கட்டை
இந்த கொழுக்கட்டையை 24 மணி நேரம் ஆவியில் வேக வைத்து தயாரிப்பார்கள். இந்த கொழுக்கட்டை தயாரிப்பதற்கான அனைத்து வேலைகளும் நேற்று ஆரம்பிக்கப்பட்டு இன்று காலை நிறைவு பெறுகிறது. தேங்காய், பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி இந்த ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.